அயோத்தி பிரச்சினை வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் – நீதிமன்றத்திற்கு பா.ஜ.க கோரிக்கை
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் அகில பாரதீய வழக்கறிஞர்கள் கவுன்சிலின் 15-வது தேசிய மாநாட்டை மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
அயோத்தி ராமஜென்மபூமி பிரச்சினையை உடனடியாக தீர்த்துவைப்பதற்காக இதனை விரைவு கோர்ட்டு போல விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் சுப்ரீம் கோர்ட்டுக்கு எனது வேண்டுகோளை விடுக்கிறேன். சபரிமலை கோவில் வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்கும்போது, ராமஜென்மபூமி பிரச்சினை மட்டும் ஏன் கடந்த 70 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது.
நாம் ஏன் பாபரை வணங்க வேண்டும். அரசியல்சாசனத்தில் ராமர், கிருஷ்ணர் ஏன் அக்பர் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பாபர் பற்றி குறிப்பிடப்படவில்லை. ஆனால் நாட்டில் நாம் இதுபோன்ற பிரச்சினைகளை பேசினால் ஒரு வித்தியாசமான சர்ச்சை உருவாகிறது.
எதிர்காலத்தில் நீதிபதிகளை நியமிப்பதற்காக அகில இந்திய நீதி சேவைகள் அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். வழக்கறிஞர்கள் கவுன்சில் உறுப்பினர்கள் ஏழைகள் மற்றும் தேவையுள்ள மக்கள் தொடர்பான வழக்கு களை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உறுதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராமஜென்மபூமி பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 14 மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்த 3 நீதிபதிகள் அமர்வு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.