இந்திய வம்சாவளி பெண்ணை மணக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிளைன் மேக்ஸ்வெல், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வினிராமன் என்ற பெண்ணின் காதல்வலையில் விழுந்தார். ‘டேட்டிங்’ என்ற பெயரில் இருவரும் ஜோடியாக கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்ததை பார்க்க முடிந்தது. சில மாதங்களுக்கு முன்பு மேக்ஸ்வெல் மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டபோது, அதில் இருந்து அவரை தேற்றியதில் வினிக்கு முக்கிய பங்கு உண்டு.
இந்த நிலையில் கடந்த வாரம் ‘நாம் திருமணம் செய்து கொள்ளலாமா?’ என்று மேக்ஸ்வெல் கேட்க, அதற்கு வினியும் ‘கிரீன் சிக்னல்’ கொடுத்தார். இதையடுத்து மோதிரம் மாற்றி திருமண நிச்சயம் செய்து கொண்டனர். இந்த தகவலை 31 வயதான மேக்ஸ்வெல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
27 வயதான வினிராமனின் பெற்றோர் தென்இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆனால் வினிராமன் பிறந்து வளர்ந்து, படித்தது எல்லாமே ஆஸ்திரேலியாவில் தான். அவர் மெல்போர்னில் மருந்தாளுனர் படிப்பை முடித்துள்ளார்.