Tamilவிளையாட்டு

உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் – இந்தியா, பாகிஸ்தான் இன்று மோதல்

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், பேராவலையும் உருவாக்கியுள்ள பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டு மைதானத்தில் இன்று மதியம் அரங்கேறுகிறது.

கிரிக்கெட் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் மோதல் என்றாலே அனல் பறக்கும். அதுவும் இது உலகக்கோப்பை என்றால் சொல்லவே வேண்டாம். உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் இந்த ஆட்டத்தை காண தவம் கிடக்கிறார்கள். இரு நாட்டு பகைமை காரணமாக ரசிகர்களும் இந்த போட்டியை ஒரு யுத்தம் போன்று உணர்வுபூர்வமாக பாவிப்பதால், அனைவரது கவனமும் இந்த ஆட்டத்தின் மீது பதிந்துள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பலம் வாய்ந்த தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளை சாய்த்தது. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

இதுவரை தோல்வியே சந்திக்காமல் 5 புள்ளிகளுடன் உள்ள இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் வலுவாக உள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் விரலில் காயமடைந்திருப்பதால் அவருக்கு பதிலாக லோகேஷ் ராகுல் தொடக்க ஆட்டக்காரராக ஆடுவார். மிடில் வரிசையில் விஜய் சங்கர் அல்லது தினேஷ் கார்த்திக் ஆகியோரில் ஒருவருக்கு இடம் கிடைக்கும். பேட்டிங்கில் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோகித் சர்மா ஆகியோரைத் தான் அணி இப்போது அதிகம் சார்ந்து இருக்கிறது. இவர்கள் நிலைத்து நின்று நீண்ட நேரம் ஆடினால் சவாலான ஸ்கோரை எட்ட முடியும்.

இந்த ஆடுகளத்தில் புற்கள் அதிகமாக இல்லை. பேட்டிங்குக்கு ஏற்ற வகையிலேயே ஆடுகளம் காணப்படுகிறது. ஆனால் மோசமான வானிலை உருவானால், தொடக்கத்தில் பந்து நன்கு ஸ்விங் ஆகி வேகப்பந்து வீச்சு எடுபடலாம். அது மட்டுமின்றி பாகிஸ்தான் வீரர்கள் சுழற்பந்து வீச்சை எளிதில் சமாளிக்கக் கூடியவர்கள். அதனால் குல்தீப் யாதவுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை சேர்ப்பது குறித்து இந்திய அணி நிர்வாகம் யோசித்து வருகிறது. பாகிஸ்தான் அணியில் 3 இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ள நிலையில் அவர்களை சாதுர்யமாக எதிர்கொள்வதற்கு இந்திய அணியில் பிரதான ஒரு இடக்கை பேட்ஸ்மேன் கூட இல்லாதது சற்று பலவீனமாகும். ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் சொன்னது போல் இந்திய வீரர்கள் களத்தில் ஆக்ரோஷமாக விளையாட வேண்டியது முக்கியமாகும்.

உலகக்கோப்பை கிரிக்கெட் புத்தகத்தை புரட்டிப் பார்த்தால், இந்தியஅணி இதுவரை பாகிஸ்தானிடம் ஒருமுறை கூட தோற்றது கிடையாது. சந்தித்த 6 ஆட்டங்களிலும் வாகை சூடியிருக்கிறது. அந்த பெருமையை தக்கவைக்கும் உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்.

சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி (இங்கிலாந்துக்கு எதிராக), 2 தோல்வி (வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக), ஒரு முடிவில்லை (இலங்கைக்கு எதிராக) என்று 3 புள்ளிகள் பெற்றுள்ளது. பாகிஸ்தானை எப்போதும் கணிக்க முடியாத அணி என்று வர்ணிப்பார்கள். அது இந்த உலக கோப்பையிலும் ஏற்கனவே நிரூபணமாகி விட்டது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான லீக்கில் 105 ரன்னில் சுருண்ட பாகிஸ்தான், ‘நம்பர் ஒன்’ அணியான இங்கிலாந்துக்கு எதிராக 348 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது.

உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியை இதுவரை வீழ்த்தியதில்லை என்ற நீண்டகால சோகத்துக்கு இந்த தடவை முடிவு கட்டியே தீர வேண்டும் என்ற வெறியுடன் பாகிஸ்தான் வீரர்கள் வரிந்து கட்டுவார்கள். இமாம் உல்-ஹக், பஹர் சமான், பாபர் அசாம் ஆகியோர் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் தூண்கள். பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது அமிர், வஹாப் ரியாஸ், ஹசன் அலி, ஷகீன் அப்ரிடி உள்ளிட்டோர் மிரட்டக் கூடியவர்கள். இவர்களுடன் அனுபவம் வாய்ந்த முகமது ஹபீஸ், சோயிப் மாலிக் பக்கபலமாக உள்ளனர். எனவே இந்த ஆட்டத்தில் முதல் பந்தில் இருந்து கடைசி வரை சுவாரஸ்யத்துக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது என்று நம்பலாம்.

சமீபத்திய செயல்பாடு, திறமை அடிப்படையில் பார்த்தால் இந்தியாவின் கையே கொஞ்சம் ஓங்கி நிற்கிறது. ஆனால் உச்சக்கட்ட நெருக்கடியை எந்த அணி நேர்த்தியாக கையாளுகிறதோ அவர்களிடமே வெற்றி வசமாகும்.

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 131 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 54-ல் இந்தியாவும், 73-ல் பாகிஸ்தானும் வெற்றி கண்டுள்ளன. 4 ஆட்டத்தில் முடிவு இல்லை. கடைசியாக இவ்விரு அணிகளும் கடந்த ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் மோதிய இரு ஆட்டங்களிலும் இந்தியாவே வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), விஜய் சங்கர் அல்லது தினேஷ் கார்த்திக், டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, யுஸ்வேந்திர சாஹல், பும்ரா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ் அல்லது முகமது ஷமி.

பாகிஸ்தான்: இமாம் உல்-ஹக், பஹார் ஜமான், பாபர் அசாம், முகமது ஹபீஸ், சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), சோயிப் மாலிக் அல்லது ஆசிப் அலி, ஷதப் கான், ஹசன் அலி அல்லது ஹாரிஸ் சோகைல், வஹாப் ரியாஸ், முகமது அமிர், ஷகீன் ஷா அப்ரிடி.

மான்செஸ்டரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்துள்ளது. ஆடுகளமும் மூடியே வைக்கப்பட்டுள்ளது. இன்றைய வானிலையை பொறுத்தவரை மழை வாய்ப்பு கொஞ்சம் குறைவு தான். அங்கு பிற்பகலில் லேசான மழை பெய்யலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *