உலக கோப்பையை யார் வெல்வார்கள் என்று சொல்ல முடியாது – ஏபி டி வில்லியர்ஸ்
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மே மாதம் 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்த உலகக்கோப்பையை போட்டியை நடத்தும் இங்கிலாந்து கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. மேலும், ஆசிய அணிகளான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் சவால் விடும் வகையில் விளையாடும் என்ற எதிர்பார்ப்பும் அதிக அளவில் உள்ளது.
இந்நிலையில் கோப்பையை வெல்லும் அணி எதுவாக இருக்கும் என்று கூறுவதாக கடினம் என்று ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20-யில் விளையாடி வரும் ஏபி டி வில்லியர்ஸ் இதுகுறித்து கூறுகையில் ‘‘யார் வெற்றி பெறுவார் எனக் கூறுவது கடினமானது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கடந்த காலங்களில் சிறப்பாக விளையாடியதை பார்க்காமல் இருக்க முடியாது. பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றுள்ளது.
ஆஸ்திரேலியாவையும் நீங்கள் புறந்தள்ளிவிட முடியாது. தென்ஆப்பிரிக்கா அணியும் அவர்களால் வெற்றி பெற முடியும் என்று நம்புவார்கள். ஆகவே, இந்த ஐந்து அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் ஒன்று அல்லது இரண்டு அணிகளை குறிப்பிட்டு கூறுவது கடினமான விஷயம். கடந்த காலங்களில் உள்ள எனது அனுபவத்தை வைத்து பார்க்கும்போது, இந்தியா அல்லது பாகிஸ்தான் கோப்பையை வெல்ல வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன்’’ என்றார்.