ஐசிசி-யின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கவுதம் கம்பிர்
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கடந்த 42 மாதங்களாக ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் இருந்து வந்தது. இந்த மாதம் தொடக்கத்தில் ஐசிசி தரவரிசையை வெளியிட்டது. அப்போது 2016-2017 சீசனுக்கான புள்ளிகள் நீக்கப்பட்டன.
இதனால் ஆஸ்திரேலியா முதல் இடத்தையும், நியூசிலாந்து 2-வது இடத்தையும் பிடித்தன. இந்தியா 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
ஐசிசி அறிமுகம் செய்யப்பட்டுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் உள்நாட்டில் மட்டுமே வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு நம்பர் ஒன் இடத்தை வழங்கியது கேலிக்கூத்தானது என்று கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கவுதம் கம்பிர் கூறுகையில் ‘‘இந்தியா 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது குறித்து நான் ஆச்சர்யம் அடையவில்லை. புள்ளிகள் மற்றும் தரவரிசை முறையை என்னால் நம்ப முடியவில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சொந்த நாட்டில் இருந்து வெளியே சென்று விளையாடி வெற்றி பெற்றாலும், உள்நாட்டில் விளையாடி வெற்றி பெற்றாலும் சமமான புள்ளிகள் வழங்கப்படுவது மிகமிக மோசம். இது கேலிக்கூத்தானது.
நீங்கள் ஒட்டுமொத்த அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டை பார்த்தீர்கள் என்றால், இந்திய அணி உள்நாட்டை தவிர்த்து வெளிநாட்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களை இழந்துள்ளது. ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளது. மிகவும் போட்டியான அணி. தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மண்ணில் வெற்றிகளை ருசித்துள்ளன. மற்ற நாடுகள் இதுபோன்று செய்யவில்லை.
இந்திய அணிக்குதான் நம்பர் ஒன் இடத்தை கொடுத்திருக்கனும். ஆஸ்திரேலியாவுக்கு நம்பர் ஒன் இடத்தை கொடுத்தது குறித்து எனக்கு மிகப்பெரிய சந்தேகம் உள்ளது. உள்நாட்டை தவிர்த்து வெளிநாட்டு மண்ணில் ஆஸ்திரேலியா அணியின் நிலை முற்றிலும் பரிதாபகரமானது’’ என்றார்.