காந்தி புகைப்படத்தை சுடுவது போல போட்டோ எடுத்த பெண் கைது!
உத்தரபிரதேசத்தில் கடந்த ஜனவரி 30ம் தேதி காந்தியின் நினைவு தினத்தினையொட்டி, அலிகார் பகுதியில் உள்ள தப்பாலுக்கு அருகே காந்தியை அவமதிப்பதை போன்று , உருவப்படத்தை சுட்டும், அவரை கொலை செய்த கோட்சே படத்துக்கு மாலை அணிவித்தும் இந்து அமைப்புகள் கொண்டாடின.
இந்த செயலைக் கண்டித்து கடந்த பிப்ரவரி 4ம் தேதி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தும்படி காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டது. அதன்படி பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் வடசென்னையில் மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சிரஞ்சீவி, இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ரஞ்சித்குமார், டி.வி.துரைராஜ், சங்கர் என பலர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதேபோன்று பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் காந்தியை கோட்சே சுட்டதை நினைவுப்படுத்துவதைப்போல துப்பாக்கியுடன் போஸ் கொடுத்த பெண் பூஜா பாண்டே மற்றும் அவரது கணவர் அசோக் பாண்டே ஆகியோரை அலிகார் போலீசார் கைது செய்துள்ளனர். தப்பால் பகுதியைச் சேர்ந்த இவர்கள் இந்து மகா சபையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.