குட்கா வழக்கு – விசாரணைக்கு ஆஜராகும்படி அமைச்சர் விஜய பாஸ்கருக்கு சம்மன்
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. செங்குன்றம் குட்கா குடோனில் வருமான வரி துறையினர் நடத்திய சோதனையின் எதிரொலியாக அங்கு கைப்பற்றபட்ட டைரியே குட்கா விவகாரத்தின் பின்னணியில் இருந்தவர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.
அந்த டைரியில் அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றிருந்தன. அதோடு போலீஸ் அதிகாரிகள், சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, கலால் துறை அதிகாரிகளின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.
அதன்பின்னர் சிபிஐ தீவிர விசாரணை நடத்தி குட்கா வியாபாரி மாதவராவ், அவரது பங்குதாரர்கள், அரசு அதிகாரிகள் என 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பின்னர் சிபிஐ தனது முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் இடம்பெறவில்லை. டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், உதவி கமிஷனர் மன்னர் மன்னன், இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோரது பெயர்களும் சேர்க்கப்படவில்லை.
இந்த நிலையில், குட்கா ஊழல் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட மற்ற நபர்களுக்கு எதிராகவும் சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. விசாரணைக்கு ஆஜராகும்படி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர் சரவணன் ஆகியோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனுக்கு சிபிஐ 2 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து மீண்டும் சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. அதில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நாளை காலை 10 மணிக்கு ஆஜராகும்படி கூறப்பட்டுள்ளது.
இந்த முறையும் அமைச்சரின் உதவியாளர் ஆஜராகவில்லை என்றால், அடுத்தகட்ட நடவடிக்கையை சிபிஐ அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என தெரிகிறது.