Tamilசினிமாதிரை விமர்சனம்

கூர்கா- திரைப்பட விமர்சனம்

சாம் ஆண்டன் இயக்கத்தில், யோகி பாபு ஹீரோவாக நடித்திருக்கும் ‘கூர்கா’ காமெடி திருவிழாவாக இருக்கிறதா அல்லது திகட்டுகிறதா, என்று பார்ப்போம்.

கூர்கா சமூகத்தை சேர்ந்த ஆணுக்கும், வட சென்னையை சேர்ந்த பெண்ணுக்கும் கலப்புத் திருமணம் நடக்க, அவர்கள் வாரிசான யோகி பாபு, போலீஸாக முயற்சிக்கிறார். ஆனால், அதற்கான தகுதியில்லாததால் பயிற்சியில் இருந்து வெளியேற்றப்படுகிறார். தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலைக்கு சேருவதோடு, அமெரிக்க தூதரக அதிகாரியான எலிசாவை ஒருதலையாக காதலிக்கிறார்.

எலிசா அடிக்கடி வந்து போகும் மல்டிபிளக்ஸ் மாலில் வாட்ச்மேனாக பணிபுரியும் யோகி பாபு, அவரை நெருங்க முயற்சித்துக் கொண்டிருக்கும் நிலையில், தீவிரவாத கும்பல் ஒன்று மாலில் புகுந்து அங்கிருப்பவர்களை சிறை பிடிக்கிறார்கள். அதில் யோகி பாபுவின் காதலியான அமெரிக்க தூதரக அதிகாரியும் சிக்கிக்கொள்கிறார். தீவிரவாத கும்பல் அரசிடம் சில நிபந்தனைகளை விதிப்பதோடு, மாலில் வெடிகுண்டையும் வைத்துவிடுகிறார்கள். மாலில் இருக்கும் ரகசிய அறை ஒன்றில் இருக்கும் யோகி பாபு, விஷயம் அறிந்து மக்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட பிறகு நடப்பது தான் மீதிக்கதை.

டைடில் கார்டிலேயே லாஜிக் பார்க்க கூடாது, என்பதை பதிவு செய்துவிடும் இயக்குநர் சாம் ஆண்டன், கடுகுக்கு கூட லாஜிக் பார்க்காமல், பூந்து விளையாடியிருக்கிறார்.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் யோகி பாபு, தனக்கு கைவந்த காமெடி வேலையை கச்சிதமாக செய்திருந்தாலும், சில இடங்களில் தடுமாறவும் செய்கிறார். குறிப்பாக எப்போதும் பேசிகொண்டே இருப்பவர், காமெடிக்கு தேவையான டைமிங்கை மிஸ் செய்வதோடு, வசனத்திலும் கவனம் செலுத்தாமல், தாறுமாறாக வசனம் பேசி தடுமாறுகிறார். பிறகு சுதாரித்துக் கொள்பவர், மாலில் வைக்கப்பட்டிருக்கும் வெடிகுண்டை தேடும் போது, ஒட்டு மொத்த திரையரங்கையே தனது நகைச்சுவையால் கட்டிப்போடுகிறார்.

ஆரம்பத்தில் கடுப்பேற்றும் சார்லி போக போக விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார். அவருடன் உயிராக மயில்சாமி இணையும் காட்சிகள், வயிறு வலிக்கும் அளவுக்கு சிரிக்க வைக்கிறது.

ரவி மரியா, நரேன், தேவதர்ஷினி, நமோ நாராயணன் என்று பல நட்சத்திரங்கள் படத்தில் இருந்தாலும், யோகி பாபு தான் அதிகமாக பேசுகிறார்.

கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவும், ராஜ் ஆர்யனின் இசையும் காமெடியை தாண்டி கவனிக்க வைக்கிறது. குறிப்பாக பின்னணி இசையும், பீஜியமும் ரசிக்க வைக்கிறது. பாடல்கள் சுமார் தான். ரூபனின் கத்திரி இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.

சீரியஸான கருவாக இருந்தாலும் கதை காமெடியாக சொல்வதால் யோகி பாபுவை ஹீரோவாக்கியிருக்கும் இயக்குநர் சாம் ஆண்டன், கூர்கா பெருமைகளை பேசுவதற்காக வைத்த சில காட்சிகள் சினிமாத்தனமாக இருக்கிறது. ஆனால், யோகி பாபுவின் தாத்தா பற்றி சொல்லும் கதை கவனிக்க வைக்கிறது.

விஜய், அஜித், விஷால், சிம்பு என்று ஹீரோக்களை அளவாக கலாய்த்திருக்கும் யோகி பாபு, கிடைக்கும் சின்ன இடத்தில் கூட ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்று பெரிய அளவில் மெனக்கெடுவதோடு, படத்தில் வரும் சில சீரியஸான காட்சிகளை கூட காமெடி காட்சியாக்கிவிடுவது திகட்ட செய்துவிடுகிறது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு, தெர்மாக்கோல் விவகாரம், டி.ஆர்.பிக்காக அலையும் தொலைக்காட்சிகள், சாமியாரின் லீலை என்று சமகால நிகழ்வுகளை வைத்து காமெடி செய்திருக்கும் இயக்குநர் சாம் ஆண்டன், இயக்குநராக திரைக்கதையில் சற்று தடுமாறியிருந்தாலும், முழுக்க முழுக்க யோகி பாபுவுக்கான படமாக கொடுப்பதில் எந்தவித தடுமாற்றமும் இன்றி காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

மொத்தத்தில், சிரிக்க வேண்டும் என்பதை மட்டுமே டார்கெட் செய்பவர்கள் அனைவருக்கும் இந்த ‘கூர்கா’வை ரொம்பவே பிடிக்கும்.

-ஜெ.சுகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *