கேப்டன் பதவியை இழக்க தயாராகவே இருந்தேன் – சர்பராஸ் அகமது
பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சர்பராஸ் அகமது. இவர் அந்த அணியின் கேப்டனாக திகழ்ந்தார். 2017 ஐசிசி சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப் போட்டியில் இந்தியாவை இவரது தலைமையிலான பாகிஸ்தான் அணி வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
அப்போது பாகிஸ்தான் ரசிகர்களாலும், அந்நாட்டு கிரிக்கெட் போர்டாலும் பாராட்டப்பட்டார். ஆனால் இங்கிலாந்தில் மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இதனால் அவர் மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டது. இறுதியாக டி20 மற்றும் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அத்துடன் அணியில் இருந்தும் வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், கேப்டன் பதவியை இழக்கும் சூழ்நிலை ஏற்படும். அதற்காக தனது மனநிலையை தயார்படுத்திக் கொண்டேன் என சர்பராஸ் அகமது தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சர்பராஸ் அகமது கூறுகையில் ‘‘உண்மையாகவே, கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட இருக்கிறோம். அதற்கான மனதளவில் தயாராகிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஓடியது.
சீனியர் வீரர்கள் அனைவரும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடும்படி ஆலோசனை வழங்கினார்கள். சில நேரங்களில் ஓய்வு என்பது அவசியம். ஏனென்றால், நான் மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக மிகவும் நெருக்கடியான கிரிக்கெட்டை விளையாடியுள்ளேன்.
தற்போது என்னுடைய முழுக்கவனம், உள்ளூர் கிரிக்கெட்டை பற்றிதான். பாகிஸ்தான் தேசிய அணிக்கு திரும்புவதை பற்றி யோசிக்கவில்லை. என்னுடைய ஆட்டத்தில் கவனம் செலுத்த விரும்புகிறேன். எப்போது என்னை அழைக்கிறார்களோ, அப்போது என்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராக இருக்கிறேன்’’ என்றார்.