Tamilசெய்திகள்

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் களம் இறங்கியது இந்தியா!

நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு கொரோனா வைரஸ் தொற்றுநோய் வெறியாட்டம் போட்டு வருகிறது.

சீனாவின் உகான் நகரில் தோன்றி, 4 மாதங்களில் உலகமெங்கும் 19 லட்சம் பேரை தாக்கி, 1 லட்சத்து 26 ஆயிரம் பேரின் உயிர்களை உலகளவில் பலி வாங்கியும் இந்த கொலைகார வைரசின் யானைப்பசி அடங்கவில்லை.

ஆனாலும் எப்படியாவது இந்த கொரோனா வைரசுக்கு முடிவு கட்டிவிட வேண்டும் என்று அறிவியல் உலகம், கங்கணம் கட்டிக்கொண்டு, ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறது.

ஆனால் கொரோனா வைரசுக்கு தடுப்பூசியை உருவாக்கி, அதை பல கட்ட பரிசோதனைகளையும், அனுமதிகளையும் வாங்கி சந்தைக்கு கொண்டுவருவது என்பது கொந்தளிக்கும் கடலில் மூழ்கி முத்தெடுப்பதுபோன்று சவால் நிறைந்ததாக இருப்பதாக அறிவியல் உலகம் சொல்கிறது. ஆனாலும் யாரும் அதற்கான முயற்சியில் இருந்து பின்வாங்கியதாக தகவல்கள் இல்லை.

அதுமட்டுமல்ல, கொரோனா வைரசின் பரவலை தடுத்து நிறுத்துவதற்கு தடுப்பூசியை கண்டுபிடித்து, சந்தைக்கு முதலில் கொண்டு வந்து நிறுத்தப்போவது யார்? என்ற போட்டி இப்போது சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது.

எந்த சீனாவில் இந்த கொரோனா வைரஸ் தோன்றியதோ, அந்த சீனா களத்தில் முதலில் நிற்கிறது.

இந்த நாட்டின் கேன்சினோ பயாலஜிக்ஸ் நிறுவனம், தடுப்பூசியை உருவாக்கி இரண்டாவது கட்ட பரிசோதனையில் குதித்து இருக்கிறது. இதை சீன அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகமும், “ஆமாம், அப்படித்தான்” என்று உறுதி செய்திருக்கிறது.

இந்த நிறுவனம் அடுத்த சில நாட்களில் 500 பேருக்கு தனது தடுப்பூசியை செலுத்தி பரிசோதிக்க தயாராக இருப்பதாக கடந்த வாரம் அறிக்கை அளித்தது. அதன்படி, 273 தன்னார்வலர்களுக்கு சுடச்சுட தடுப்பூசியை செலுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

அமெரிக்காவில் தேசிய சுகாதார நிறுவனமும், மாடர்னா நிறுவனமும் கிட்டத்தட்ட சீனாவின் நிலையில்தான் இருப்பதாக அமெரிக்காவில் இருந்து வரும் தகவல்கள் சொல்கின்றன.

கடந்த மாதம் இவர்கள் ஒருவருக்கு தடுப்பூசியை செலுத்தி பரிசோதித்து இருக்கிறார்கள். அந்த நபர், அடுத்து இரண்டாவது கட்ட கள பரிசோதனைக்கு கடந்த செவ்வாய்க் கிழமையன்று சியாட்டில் கிளினிக் சென்றதாக தெரிய வந்துள்ளது.

அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தின் டாக்டர் அந்தோணி பாசி இதுபற்றி சொல்லும்போது, “இதுவரை பரிசோதனை நன்றாக செல்கிறது. எந்த ஆபத்தான அம்சமும் இல்லை. அடுத்து பெரிய அளவில் நிறைய பேருக்கு தடுப்பூசியை செலுத்திப்பார்க்கிற சோதனையானது, ஜூன் மாதம் நடைபெறும்” என்கிறார்.

அதே அமெரிக்காவில் இனோவியா நிறுவனத்தார், தாங்கள் உருவாக்கியுள்ள தடுப்பூசியின் முதற்கட்ட சோதனையை கடந்த வாரம் நடத்தத் தொடங்கி இருக்கிறார்கள். இந்த நிறுவனம், தனது சோதனையை சீனாவுக்கு விரிவுபடுத்த இருக்கிறதாம்.

அமெரிக்காவும் சரி, சீனாவும் சரி, ஆரம்ப கட்ட சோதனையை பொறுத்தமட்டில் பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்துகின்றன. இரு நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்களுமே வெவ்வேறு வகையில், வெவ்வேறு அளவில் தடுப்பூசி மருந்தை செலுத்தி சோதிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆனால் தடுப்பூசி பரிசோதனையில் இரண்டாவது கட்டம்தான் சினிமா கிளைமாக்ஸ் மாதிரி முக்கியமானது, பரபரப்பானது, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதும்கூட. ஏராளமானோருக்கு தடுப்பூசியை செலுத்தி சோதிக்கிற மிக முக்கியமான கட்டமாக இது அமைந்துள்ளது என்பதை இங்கு கோடிட்டுக்காட்ட வேண்டியதிருக்கிறது.

அப்படி செலுத்தப்படுகிற நபர்களுக்கு கொரோனா வைரசுக்கு எதிரான பாதுகாப்பான அறிகுறிகள் தென்படுகின்றனவா என்பதில் விஞ்ஞானிகள் ஆழ்ந்த கவனத்தை செலுத்துவார்கள். அதே நேரத்தில் தடுப்பூசி தொடர்பாக டாக்டர் அந்தோணி பாசி தொடர்ந்து பேசும்போது, “12 மாதங்கள், 18 மாதங்கள் என்று தடுப்பூசிக்கான கால அளவு பேசப்பட்டு வந்தாலும்கூட, அதற்கு முன்னதாகவேகூட, பெரிய அளவில் ஆய்வுகளை முடிக்க முடியும்” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்.

சீனாவைச் சேர்ந்த மருந்து வல்லுனர் வாங் ஜுன்ஜியோ, “தடுப்பூசி கண்டுபிடிப்பதில் நாங்கள் அவசரத்தில் இருக்கிறோம். ஆனாலும், அதற்காக பாதுகாப்பு மற்றும் செயல்திறன் தரத்தை குறைத்துவிட முடியாது. ஏனென்றால் இதில் மக்கள் மிகப்பெரிய அளவில் கவனம் செலுத்தி வருகிறார்கள்” என்று எச்சரிக்கையுடன் கருத்து தெரிவிக்கிறார். அதுவும் சரியாகத் தான் இருக்கிறது.

உலக சுகாதார நிறுவனமோ, 5 டஜனுக்கும் அதிகமான நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிக்கும் ஆரம்பகட்ட முயற்சியில் இருப்பதாக மேலும் பரபரப்பை கூட்டுகிறது.

இதற்கு மத்தியில், மருந்துலகின் ஜாம்பவான்கள் என்று உலகளவில் சொல்லப்படுகிற பிரான்ஸ் நாட்டின் சனோபி நிறுவனமும், இங்கிலாந்து நாட்டின் கிளாஸ்கோ ஸ்மித்கிளைன் நிறுவனமும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் கரம் கோர்த்து இருக்கின்றன. இது தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியை மேலும் சூடாக்கி, களத்தில் பரபரப்பைக் கூட்டி இருக்கிறது.

இந்த போட்டிகள் ஒரு பக்கம் இருந்தாலும் இந்தியாவும் தோதாவில் குதித்து இருப்பது உலக நாடுகளை பரபரக்க வைத்திருக்கிறது என்றால் அது உண்மை.

ஒன்றல்ல, இரண்டல்ல, 6 இந்திய நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் உலக போட்டியில் குதித்து இருக்கின்றன என்று சொல்கிறார் மூத்த விஞ்ஞானி ஒருவர்.

மற்றொரு தகவலோ, கிட்டத்தட்ட 70 தடுப்பூசிகள் இங்கே உருவாக்கப்பட்டு இருக்கின்றன; இவற்றில் 3 தடுப்பூசிகள் மனிதர்களுக்கு செலுத்திப்பார்க்கிற அளவுக்கு தயார் நிலையில் இருக்கின்றன. அதே நேரத்தில் அடுத்த ஆண்டுக்கு முன்னதாக வெகுஜன பயன்பாட்டுக்கு தடுப்பூசி வருவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

சைடஸ் கேடிலா நிறுவனம், தன் பங்குக்கு 2 தடுப்பூசிகளை உருவாக்கி வருகிறது. சீரம் இன்ஸ்டிடியூட், இந்தியன் இம் யுனோலாஜிக்கல்ஸ், மைன்வாக்ஸ் ஆகிய முன்னணி நிறுவனங்கள் தத்தமது பங்காக ஆளுக்கொரு தடுப்பூசியை உருவாக்கி வருகின்றன என்ற தகவலை அரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள டிரான்ஸ்லேசனல் சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் செயல் இயக்குனர் ககன்தீப்காங் சொல்கிறார்.

இவர் தொற்றுநோய்களுக்கான ஆயத்த கண்டுபிடிப்புகளின் கூட்டணி என்ற அமைப்பின் துணைத்தலைவராகவும் இருக்கிறார்.

அண்மையில் இந்த அமைப்பு, கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு, உலக அளவில் இதுவரை இல்லாத வேகத்தில், அளவில் சூடுபிடித்திருக்கிறது என்று கருத்து தெரிவித்தது. ஆனால் இது பல கட்ட சோதனைகளையும், சவால்களையும் சந்தித்தாக வேண்டும் என்கிறார்கள் வல்லுனர்கள். பாதுகாப்பான, செயல்திறன் மிக்க தடுப்பூசி சந்தையில் கிடைப்பதற்கு ஒரு வருடமாவது ஆகும் என்பதுவும் வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.

“தடுப்பூசியை உருவாக்குவது என்பது ஒரு நீண்ட கால செயல்முறை. இது பல சவால்களைக் கொண்டிருக்கிறது. எனவே பல ஆண்டுக்காலம் கூட ஆக வாய்ப்பு உண்டு” என்று எச்சரிக்கையுடன் பேசுகிறார், திருவனந்தபுரத்தில் உள்ள ராஜீவ்காந்தி உயிர் தொழில்நுட்ப மையத்தின் தலைமை அறிவியல் அதிகாரி ஸ்ரீகுமார்.

“தடுப்பூசி சோதனை என்பது பொதுவாக விலங்குகள் மற்றும் ஆய்வுக்கூட சோதனையில் தொடங்குகிறது. அதன் பிறகுதான் மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்க முடியும். அது பல கட்டங்களைக் கொண்டது. முதற்கட்ட சோதனை என்பது சிறிய அளவிலானது. சில பங்கேற்பாளர்களை மட்டுமே கொண்டது. இதில் அந்த தடுப்பூசி, மனிதர்களுக்கு பாதுகாப்பானதா? என்பது ஆராயப்படும். 2-வது கட்ட சோதனை என்பது பல 100 பேரை உள்ளடக்கியது. முக்கியமாக தொற்றுநோய்க்கு எதிரான செயல்திறனை அது மதிப்பீடு செய்வதாக இருக்கும். இறுதிக்கட்டத்தில் பல்லாயிரம் பேரை கொண்டதாக சோதனை அமையும். இது பல மாதங்களுக்கு நீடிக்கும். எனவேதான் இந்த ஆண்டுக்குள் கொரோனா வைரஸ் தடுப்பூசி பயன்பாட்டுக்கு கிடைத்து விடும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை” என்று உண்மைகளைப்போட்டு உடைக்கிறார் இவர்.

இதைத்தான் ஐதராபாத்தில் உள்ள செல்லுலார் மற்றும் மோலிகுலர் பயாலஜிக்கான சி.எஸ்.ஐ.ஆர். அமைப்பின் இயக்குனர் ராகேஷ் மிஷ்ராவும் சொல்கிறார்.

“பொதுவாகவே தடுப்பூசி கண்டுபிடிப்பு என்பது பல சோதனைகளின் வெவ்வேறு கட்டங்களை கடக்க வேண்டியிருப்பதால் பல மாதங்கள் பிடிக்கும். அது மட்டுமல்ல, பல்வேறு ஒப்புதல்களையும் பெற வேண்டியதிருக்கிறது. எனவே இந்த ஆண்டில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசி வந்துவிடும் என்று நாங்கள் எதிர்பார்க்க வில்லை” என்கிறார் ராகேஷ் மிஷ்ரா.

அது மட்டுமல்ல, “தடுப்பூசி தயாரான பிறகும்கூட, அது அனைத்து மக்களுக்கும் பயன் உள்ளதா, பயன்தரத்தக்கதா என்பதையெல்லாம் ஆராய வேண்டியதிருக்கிறது. இது பல சவால்களை கொண்டது. கொரோனா வைரசுக்கு பல தடுப்பூசிகள் ஆராயப்பட்டு வருகின்றன. அவற்றில் சில முதற்கட்ட பரிசோதனையில் உள்ளன. ஒரு தடுப்பூசியை நோக்கி எவ்வளவு விரைவாக முன்னேற்றம் காண முடியும் என்பதை சொல்லி விட முடியாது. எப்படிப்பார்த்தாலும் அதற்கு பல மாதங்கள் ஆகலாம்” என்று நிலைமையை தெளிவுபடுத்துகிறார் ராகேஷ் மிஷ்ரா.

நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரை தலைமையிடமாக கொண்ட ‘செபி’ என்னும் தொற்றுநோய் தயாரிப்பு கண்டுபிடிப்புகளின் கூட்டணி அமைப்பு, கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு 115 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன; அவற்றில் 78 உறுதிப்படுத்தப்பட்டு, அடுத்தகட்ட செயல்பாடுகளில் இருக்கிறது; 37 தடுப்பூசிகள் உறுதிப்படுத்தப்படவில்லை என்ற புதிய தகவலை தருகிறது.

உறுதிப்படுத்தப்பட்ட 78 தடுப்பூசிகளில், 73 தற்போது ஆய்வுக்கூட பரிசோதனைக்கு முந்தைய நிலையில் இருக்கின்றன. அமெரிக்காவின் மாடர்னா, சீனாவின் கேன்சினோ பயாலஜிக்ஸ், அமெரிக்காவின் இனோவினோ ஆகிய நிறுவனங்கள் மனிதர்களுக்கு செலுத்திப்பார்க்கிற கட்டத்தை அடைந்துள்ளன என்பது செபியின் தகவலாக இருக்கிறது.

இதற்கிடையே, ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் அமைப்பான சி.எஸ்.ஐ.ஆர்.ஓ., இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை சோதனை செய்து வருவதாக சொல்கிறது.

ஆக, இப்போது யார் முதலில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை தடுத்து நிறுத்த தடுப்பூசி தரப்போகிறார்கள் என்பதுதான் உலகளாவிய போட்டியாக இருக்கிறது.

இந்தப் போட்டியில் சீனா, அமெரிக்கா என்கிற இரு வல்லரசு நாடுகளுடன் இந்தியாவும் “நீயா, நானா?” என பார்த்துவிடுவோம் என்று களம் இறங்கி இருப்பது அறிவியல் உலகத்தின் பார்வையை ஈர்த்து இருக்கிறது.

சாதனை படைக்கப்போகிறவர்களுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு கிடைப்பதற்கான வாய்ப்பு பிரகாசம். எனவே போட்டியும் சூடாகி இருக்கிறது. உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது, கொரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பூசி எப்போது வரும் என்று!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *