கோவையில் மழையால் வீடுகள் இடிந்து விழுந்தது – 15 பேர் உயிரிழப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்து பெரிய அளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கி 2 பெண்கள், குழந்தைகள் உள்பட 15 பேர் பலியாகினர்.
போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் முழுவீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வருவாய்த்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணி மேற்கொண்டுள்ளனர்.