சபரிமலைக்கு பக்தர்களின் வருகை அதிகரிப்பு!
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் கடந்த 16-ந் தேதி மண்டல பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டது.
வழக்கமாக மண்டல பூஜை காலத்தின் போது சபரிமலை கோவிலுக்கு கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவில் இருந்து அதிக அளவு ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனத்திற்குச் செல்வார்கள். இதனால் முதல் நாளில் இருந்தே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
ஆனால் தற்போது சபரிமலையில் இளம்பெண்களை சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகளும், இந்து அமைப்புகளும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
சபரிமலை செல்லும் இளம்பெண்களும் விரட்டியடிக்கப்படுகிறார்கள். இதனால் சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற காரணங்களால் சபரிமலை செல்லும் பக்தர்கள் கூட்டம் இந்த முறை குறைந்தது. சபரிமலையில் ஐயப்ப பக்தர்களிடம் போலீசார் கெடுபிடியாக நடந்து கொள்வதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். கேரள ஐகோர்ட்டும் இது தொடர்பாக அரசுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.
இதனால் சபரிமலையில் பக்தர்களிடம் கெடுபிடி குறைந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் சபரிமலை செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.
நேற்று ஒரே நாளில் சபரிமலைக்கு 68 ஆயிரத்து 315 பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்தனர். இந்த மண்டல பூஜை காலத்தில் இந்த அளவுக்கு அதிக பக்தர்கள் சபரிமலை சென்றது இதுதான் முதல் முறையாகும். தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளதால் அங்கு அரவணை, அப்பம் பிரசாதம் விற்பனையும் அதிகரித்து உள்ளது. இதன் மூலம் தேவசம் போர்டுக்கு கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.
சபரிமலையில் போலீஸ் கெடுபிடிகளுக்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் ஏராளமானோர் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இதை விசாரித்த ஐகோர்ட்டு சபரிமலையில் ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதிகள் ராமன் , ஸ்ரீஜெகன், டி.ஜி.பி. ஹேமச்சந்திரன் ஆகிய 3 பேர் அடங்கிய குழுவை நியமித்தது.
இந்த குழு நேற்று சபரிமலை சென்று தங்களது ஆய்வு பணியை தொடங்கியது. முதலில் நிலக்கல்லில் அவர்கள் ஆய்வு செய்தனர். அதன் பிறகு அங்கிருந்து கேரள அரசு பஸ் மூலம் பம்பை சென்ற அந்த குழுவினர் அங்கும் பக்தர்களை சந்தித்து அவர்கள் கருத்துக்களை கேட்டனர். சபரிமலையில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.
தங்களது முதல் கட்ட ஆய்வு பற்றி கருத்து தெரிவித்த 3 பேர் குழுவினர் சபரிமலை வரும் பக்தர்களுக்கு நிலக்கல்லிலும், பம்பையிலும் கேரள அரசு செய்துள்ள வசதிகள் திருப்தியாக இருப்பதாக தெரிவித்தனர்.
இந்த குழுவினர் இன்று சபரிமலை சன்னிதானம் சென்றனர். அங்கும் அவர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் பிறகு அவர்கள் தங்கள் ஆய்வு அறிக்கையை கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்வார்கள். அதன் அடிப்படையில் கேரள ஐகோர்ட்டு உத்தரவுகளை பிறப்பிக்கும்.