Tamilசெய்திகள்

தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் திடீர் கைது!

தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் வருகிற 7-ந்தேதி நடக்கிறது. இதையடுத்து அங்கு பிரசார களம் சூடு பிடித்துள்ளது.

தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தலைவரும், முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவ் சூறாவளி பயணம் மேற்கொண்டு பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறார்.

இன்று மாலை கோதண்கல் தொகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் சந்திரசேகர ராவ் பங்கேற்று பேசுகிறார்.

கோதண்கல் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் செயல் தலைவர் ரேவந்த் ரெட்டி போட்டியிடுகிறார்.

இதற்கிடையே கோதண்கல் தொகுதிக்கு வருகை தரும் சந்திரசேகரராவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று ரேவந்த் ரெட்டி அறிவித்தார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இந்த நிலையில் இன்று அதிகாலை ரேவந்த் ரெட்டியை அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். மேலும் அவரது சகோதரர், பாதுகாவலர், வீட்டு காவலாளி ஆகியோரையும் அழைத்து சென்றனர்.

இதுபற்றி ரேவந்த் ரெட்டி மனைவி கீதா ரெட்டி கூறியதாவது:-

அதிகாலை 3 மணிக்கு சிலர் எங்களது வீட்டு கதவை உடைத்து அத்துமீறி உள்ளே நுழைந்தனர். ஒரு அறையில் நான், கணவர், மகளுடன் தூங்கி கொண்டிருந்தோம். அவர்கள் எனது கணவரை அங்கிருந்து அழைத்து சென்றனர்.

நாங்கள் என்ன பயங்கரவாதிகளா? அதுபோன்று எங்களை நடத்துவதா?

இவ்வாறு அவர் ஆவேசமாக கூறினார்.

சந்திரசேகர ராவ் ஊர் வலத்தையும், பொதுக் கூட்டத்தையும் தடுத்து நிறுத்த ரேவந்த் ரெட்டியும் அவரது ஆதரவாளர்களும் முயற்சி செய்வார்கள் என்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டார்கள்.

கைது செய்யப்பட்ட ரேவந்த் ரெட்டியை கோதண்கல் தொகுதியில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜெத்சேர்லா என்ற இடத்துக்கு கொண்டு சென்றனர். அவரது பாதுகாவலர், வீட்டு காவலாளியை நடு வழியில் விடுவிடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *