சிலுக்குவார்பட்டி சிங்கம்- திரைப்பட விமர்சனம்
அறிமுக இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில், விஷ்ணு விஷால் நடித்து தயாரித்திருக்கும் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ எப்படி என்பதை பார்ப்போம்.
போலீஸ் கான்ஸ்டபிளான விஷ்ணு விஷால், ரொம்பவே பயந்த சுபாவம் கொண்டவர். கம்பீரமான காக்கி சட்டையை களங்கப்படுத்தும் விதத்தில் யாரை பார்த்தாலும் பயப்படும் இவர், தனக்கு பிடித்த ஆப்பாயிலுக்கு மட்டும் எதாவது ஆபத்து என்றால் பெரும் கோபக்காரராகிவிடுவார். அப்படி ஒரு முறை, பெரிய ரவுடியான சாய்குமார் விஷ்ணு விஷால் சாப்பிடும் ஆப்பாயிலை தெரியாமல் தட்டிவிட, கோபத்தில் அவரை புரட்டி எடுக்கும் விஷ்ணு விஷால், அப்படியே அவரை கைது செய்து லாக்கிப்பில் அடைக்கிறார். போலீஸ் அதிகாரி உள்ளிட்ட பல கொலைகளை செய்த சாய்குமாரை, என்கவுண்டர் செய்ய சென்னை போலீஸ் தேடு தேடு என்று தேடிக்கொண்டிருக்க, அவர் தான் இவர், என்பது தெரியாமல் விஷ்ணு விஷால், சிலுக்குவார்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் சாய்குமாரை வெச்சு செய்கிறார்.
இதற்கிடையே, சாய்குமாரின் ஆட்கள் போலீசாரை அடித்துவிட்டு சாய்குமாரை மீட்க, வெளியே வரும் சாய்குமார், விஷ்ணு விஷாலை கொன்றுவிட்டு தான் மறுவேலை பார்ப்பேன், அதுவரை சிலுக்குவார்பட்டியில் தான் இருப்பேன், என்ற சபதத்தோடு விஷ்ணு விஷாலை விரட்ட, ரவுடியிடம் சிக்காமல் இருக்க பல கெட்டப்புகளை போட்டுக்கொண்டு விஷ்ணு விஷால் ஓடி ஒளிந்துக்கொள்கிறார். இந்த நிலையில், விஷ்ணு விஷாலின் காதலியான அவரது அத்தை மகள் ரெஜினாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்படுகிறது. ரவுடியிடம் சிக்காமல் இருக்க வேண்டும், அதே சமயம் காதலியின் திருமணத்தையும் தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் விஷ்ணு விஷால், அதை எப்படி செய்கிறார் என்பதை காமெடியாக சொல்லியிருப்பது தான் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தின் மீதிக்கதை.
விஷ்ணு விஷால் ஹீரோவாக இருந்தாலும், திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து பிற நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். எளிமையான வேடத்தை ரொம்ப எளிமையாகவே கையாண்டிருக்கும் விஷ்ணு விஷால், இந்த படத்தில் தயரிப்பாளராக பட்ட கஷ்ட்டங்களை காட்டிலும் நடிகராக 5 சதவீதம் கூட கஷ்ட்டப்பட்டு இருக்க மாட்டார் என்று படத்தின் அனைத்து காட்சிகளும் நிரூபிக்கிறது.
ஹீரோயின் ரெஜினா கெசண்ட்ரா, எப்போதும் போல ஹீரோவுடன் டூயட், சேசிங் என்று வந்து போகிறார். வில்லனாக வரும் சாய்குமாரை காட்டிலும் அவரது அடியாட்களாக வருபவர்கள் காமெடியில் கவர்கிறார்கள். குறிப்பாக யோகி பாபு வரும் இடங்கள் அனைத்தும் காமெடி நல்லாவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.
இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் மற்றும் ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் இருவரது பெயரை தொழில்நுட்ப கலைஞர்களாக சொல்லிக்கொள்ளலாமே தவிர மற்றபடி அவர்களை குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு அவர்களது பணியில் எந்தவித தனித்துவமும் இல்லை.
ரசிகர்கள் குடும்பத்தோடு படம் பார்த்து சிரிக்க வேண்டும், என்ற எண்ணத்தில் இந்த படத்தின் திரைக்கதையை இயக்குநர் செல்லா செய்யாவு வடிவமைத்திருக்கிறார். படத்தில் எந்தவித டபுள் மீனிங் வசனங்களோ, முகம் சுழிக்கும் காட்சிகளோ இல்லாமல் ரொம்பவே நேர்மையாக இப்படத்தை கையாண்டிருக்கும் இயக்குநர் செல்லா அய்யாவை பாராட்டலாம். ஆனால், அதற்காக கமர்ஷியலாக படம் எடுக்கிறேன், என்ற பெயரில் பல இடங்களில் ரசிகர்கள் கண் கலங்கும் அளவுக்கு வாட்டி வதைத்தும் விடுகிறார்.
காமெடியை விரும்பும் ரசிகர்களை மட்டுமே டார்க்கெட் செய்திருக்கும் இயக்குநர் செல்லா அய்யாவு, பழைய கதையை பழைய முறையில் சொல்லியிருந்தாலும், ரசிகர்கள் ரசிக்கும் வகையில் நிறைவான காமெடியுடன் சொல்லியிருக்கிறார்.
மொத்தத்தில், லாஜிக் உள்ளிட்ட எந்த ஒரு விஷயத்தை எதிர்ப்பார்க்காமல் படம் பார்க்க போகிறவர்களுக்கு இந்த ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ மகிழ்ச்சியை கொடுக்கும்.
-ஜெ.சுகுமார்