சிவகார்த்திகேயன் தயாரிக்கும் மூன்றாவது படம்! – ’அருவி’ இயக்குநர் இயக்குகிறார்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல், படங்களை தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக சினிமாவில் சாதிக்க நினைக்கும் இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார்.
இவர் இதுவரை 2 படங்களை தயாரித்துள்ளார். அதில் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான “கனா” திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ரியோ நடிக்கும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தை தயாரித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 14-ந் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அப்போது, தான் தயாரிக்கும் அடுத்த படத்தை அருவி பட இயக்குனர் அருண் பிரபு இயக்க உள்ளதாக சிவகார்த்திகேயன் அறிவித்தார்.