Tamilசினிமாதிரை விமர்சனம்

சூப்பர் டீலக்ஸ்- திரைப்பட விமர்சனம்

ஆராண்யகாண்டம் என்ற தனது முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் தியாகராஜன் குமரராஜா, 8 வருடங்களுக்கு பிறகு இயக்கியிருக்கும் இரண்டாவது படமான ‘சூப்பர் டீலக்ஸ்’ எப்படி என்பதை பார்ப்போம்.

பகத் பாசிலின் மனைவி சமந்தா, தனது முன்னாள் காதலனை அழைத்து உடலுறவுக் கொள்ளும் போது, காதலன் இறந்துவிடுகிறார். உண்மையை கணவனிடம் சொல்லி, போலீசில் சரணடைந்துவிடுவதாக அவர் சொன்னாலும், விஷயம் வெளியில் தெரிந்தால் தனக்கு அவமானமாகிவிடும் என்பதால், இறந்தவர் உடலை அப்புறப்படுத்திவிட்டு, விவாகரத்து பெற்றுவிடலாம் என்ற நிபந்தனையோடு, சமந்தாவும், பகத் பாசிலும் இறந்தவர் உடலை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட, அதனால் மேலும் சில பிரச்சினைகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.

மற்றொரு கதையில், 7 வயது சிறுவன் வீட்டை விட்டு ஓடிப்போன தனது தந்தை மீண்டும் வீடு திரும்புவதை அறிந்து அவருக்காக காத்துக் கொண்டிருக்க, மாணிக்கமாக ஓடிய நபர் ஷில்பா என்ற திருநங்கையாக (விஜய் சேதுபதி) வருவதை பார்த்து உறவினர்கள் அனைவரும் அதிர்ந்துபோகிறார்கள். சிறுவன் மட்டும் தனது அப்பா ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, தன்னுடன் இருந்தால் போதும் என்பதால் தனது அப்பாவுடன் சகஜமாக பழக, சுற்றி இருப்பவர்கள் மட்டும் விஜய் சேதுபதியை கிண்டல் செய்கிறார்கள். இதனால், மீண்டும் வீட்டை விட்டு செல்ல விஜய் சேதுபதி முடிவு செய்ய, அந்த நேரத்தில் அவரது மகன் காணாமல் போகிறார், தனது மகனுக்கு என்ன ஆனது என்று பதறும் விஜய் சேதுபதி அவரை தேடி அலைகிறார்.

இன்னொரு கதையில், பள்ளி படிக்கும் டீன் ஏஜ் மாணவர்கள் ஐந்து பேர் ஆபாசப் படம் பார்க்கும் போது, அந்த படத்தில் அந்த இளைஞர்களில் ஒருவரது அம்மா (ரம்யா கிருஷ்ணன்) நடித்திருக்கிறார். அதைப் பார்த்து அதிர்ச்சியாகும் அந்த இளைஞர், தனது அம்மாவை கொலை செய்ய முயற்சிக்கும் போது, எதிர்பாராமல் அவர் காயமடைந்து உயிருக்கு போராட, அவரை காப்பாற்ற பணம் இல்லாத அவரது அம்மா ரம்யா கிருஷ்ணன் தவிக்கிறார்.

இந்த மூன்று கதைகளுக்கும், கதாபாத்திரங்களுக்கும் சம்மந்தம் இல்லை என்றாலும், இவர்களை ஒரே புள்ளியில் சில கதாபாத்திரங்கள் இணைப்பதோடு, இவர்களது இந்த துயரமான வாழ்க்கையை சூழ்நிலை எப்படி மாற்றுகிறது என்பது தான் படத்தின் கதை.

‘ஆராண்யகாண்டம்’ படத்தைப் போலவே இதுவும் ஒரு நாள் நடக்கும் கதை மட்டும் அல்ல, அப்படத்தைப் போலவே, பல கதாபாத்திரங்களின் வாழ்க்கையை சூழ்நிலை எப்படி மாற்றுகிறது, என்பதை சொல்லும் திரைக்கதையும் கூட. ஆனால், அப்படத்தின் திரைக்கதை போல நேர்த்தியாகவும், சுவாரஸ்யமாகவும் இப்படத்தின் திரைக்கதை இருக்கிறதா? என்றால் அது பெரிய கேள்விக்குறிதான்.

வாழ்க்கையில் மன்னிக்க முடியாத தவறுகள் என்பது எதுவும் இல்லை, அதே சமயம் நல்லவர்கள் என்பவர்களும் யாரும் இல்லை, மொத்தத்தில், வாழ்க்கையில் நடக்கும் நல்லது கெட்டது அனைத்தும் தற்செயலானது, அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டால் வாழ்க்கை எப்போதும் சந்தோஷமாகவும், சாதாரணதுமாகவும் இருக்கும், என்பதை தான் இப்படம் சொல்கிறது. ஆனால், அதை சாதாரண தோனியில் சொல்லாமல், மூளையை கசக்கி பிழிந்து புரிந்துக் கொள்ளக்கூடிய விதத்தில் சொல்லப்பட்டிருப்பது தான் படத்திற்கு மிகப்பெரிய பலவீனம்.

இதே பாணியில் தான், ஆரண்யாகாண்டம் படத்தை இயக்குநர் தியாகராஜா குமரராஜா சொல்லியிருந்தாலும், அந்த திரைக்கதையில் இருந்த விறுவிறுப்பும், சுவாரஸ்யமும், இதில் மிஸ்ஸிங், என்று தான் சொல்ல வேண்டும், அதே சமயம், கடவுள் இருக்கிறாரா இல்லையா, மொழி உணர்வை வெளிப்படுத்தும் போது, ஜாதி உணர்வை வெளிப்படுத்துவதில் என்ன தவறு, என்று சில இடங்களில் அரசியல் பேசப்படுவதாலும், நீண்ட நேரம் கதையுடன் பயணிக்க முடியவில்லை.

படத்தின் ஹீரோ விஜய் சேதுபதி, என்று விளம்பரப்படுத்தப் பட்டாலும், இது அவரது படம் இல்லை. படத்தின் ஹீரோ அண்ட் ஹீரோயின் சமந்தாவும், பகத் பாசிலும் தான். திருநங்கையாக வரும் விஜய் சேதுபதி, வித்தியாசமான கெட்டப்பில் நடித்துவிட்டேன், என்று பெருமை பட்டுக் கொண்டாலும், நடிப்பு என்று பார்த்தால் அவரது பங்களிப்பு சிறிது கூட இல்லை.

வேம்பு என்ற கதாபாத்திரத்தில் கணவனுக்கு துரோகம் செய்துவிட்டு, பிரச்சினை வந்ததும் அதே கணவனுடன் பயணிக்கும் சமந்தாவும், துரோகம் செய்த மனைவிக்கு உதவி செய்தாலும் அதை தனது சுயநலத்துக்காக செய்யும் பகத் பாசில், பிறகு அதே மனைவிக்கு, ஏன் தன்னை பிடிக்க வில்லை என்று யோசித்து புலம்புவது என்று நடிப்பில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.

காமெடி வேடங்களில் கலக்கிய பகவதி பெருமாள், வில்லத்தனமான கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கிறார். காமெடி நடிகரா இவர்!, என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு தனது கொடூர வில்லத்தனத்தை கூலாக செய்திருக்கிறார். இயக்குநர் மிஸ்கின் ஒரு சில காட்சிகளில் வந்தாலும், இதுவரை வெளிப்படுத்திய நடிப்பில் இருந்து மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ரம்யா கிருஷ்ணன், மருத்துவமனை காட்சியில் மட்டும் கவனிக்க வைக்கிறார். காயத்ரி, விஜய் சேதுபதியின் மகன், அவரது பாட்டி என்று சிறு சிறு வேடத்தில் நடித்தவர்களும் மனதில் ஒட்டிக் கொள்கிறார்கள்.

தனது படம் இப்படி தான் இருக்கும், தனது கதாபாத்திரம் இப்படி தான் பேசும், தனது கதாபாத்திரங்கள் வாழும் இடங்கள் இப்படி தான் இருக்கும், என்று மேக்கிங்கில் தனக்கென்று தனி பாணியை கடைப்பிடிக்கும் இயக்குநர் தியாகராஜா குமரராஜா, பழைய கட்டிடங்களையும், அழுக்குபடிந்த இடங்களையும் தேடி பிடித்து படமாக்கியிருக்கிறார். அவரது எண்ணத்திற்கு ஏற்ப ஒளிப்பதிவாளர் பி.எஸ்.வினோத் காட்சிகளை படமாக்கியிருப்பதோடு, லைட்டிங்கையும் இயக்குநர் மனதுக்கு பிடித்தது போலவே செய்திருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை கவனிக்க வைத்திருக்கிறது. டம்மு டும்மு என்று வாசிக்காமல், காட்சிகளில் இருக்கும் சோகம், கொடூரம், வன்மம் போன்றவற்றை இசையின் மூலமாகவும் நம் மனதுக்குள் யுவன் கடத்துகிறார். சில இடங்களில் பழைய பாடல்கள் ஒலிப்பதும் ரசிக்க வைக்கிறது.

படத்தில் இடம்பெறும் மூன்று கதைகளும் தொடங்கும் போது இருக்கும் விறுவிறுப்பு, அக்கதைகளின் அடுத்தடுத்த காட்சிகளில் இல்லாமல் போவதோடு, படத்தின் நடு நடுவே, எது சரி, எது தவறு என்று பேசுவதும், காமம் தொடர்பான வார்த்தைகளை தொடர்ந்து பயன்படுத்துவதும் சலிப்படைய செய்கிறது.

படத்தில் வரும் கதாபாத்திரங்கள் வாழும் இடங்கள், அனைத்தும் பழைய கட்டிடங்களாக இருப்பது, தனித்துவமாக இருந்தாலும், லாஜிக்காக பார்த்தால், தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு இல்லை. அதிலும், தனியார் மருத்துவமனையை அப்படி ஒரு பழைய லுக்கில் காட்டியிருப்பது எல்லாம் கொஞ்சம் ஓவர் தான்.

திரைக்கதை யுக்தி, தனித்துவமான மேக்கிங் என்று இயக்குநர் தியாகராஜா குமரராஜாவை அவரது முதல் படத்தில் பாராட்டியது போல, இந்த படத்திற்காகவும் சில இடங்களில் பாராட்டினாலும், முழு படமாக அவர் இப்படத்தை கையாண்ட விதம் மக்களிடம் இருந்து தள்ளியே இருக்கிறது. இவை அனைத்தும் மக்களின் வாழ்க்கையில் நடக்க கூடியது தான், என்றாலும் அதை அவர் படமாக்கிய விதம், சினிமாத்தனமாகவும், உலக சினிமா என்ற வட்டத்திற்குள் இருக்க வேண்டும், என்பதற்காகவும் சொல்லப்பட்டது போல இருக்கிறது.

மொத்தத்தில், இந்த ‘சூப்பர் டீலக்ஸ்’ சுமாரான படமாகவே இருக்கிறது.

-ஜெ.சுகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *