சூர்யாவை பாராட்டிய விவசாயிகள்!
சூர்யா-கே.வி.ஆனந்த் கூட்டணியில் சமீபத்தில் வெளியான ’காப்பான்’ படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், ‘காப்பான்’ படத்தில் விவசாயிகளின் நலனுக்காகக் குரல் கொடுத்த நடிகர் சூர்யாவை தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் விவசாயிகளோடு நேரில் சந்தித்து பாராட்டினார்.
பெரும் ஆபத்து சூழ்ந்திருக்கும் டெல்டா மாவட்டங்களின் நிலையை அப்பட்டமாகப் படமாக்கி, விவசாயிகளின் புரட்சிக் குரலாக முழங்கி இருக்கும் நடிகர் சூர்யாவையும் இயக்குநர் கே.வி.ஆனந்தையும் விவசாயிகள் பாராட்டினார்கள். கடைக்கோடி மக்களுக்கும் புரியும் வண்ணம் விவசாய பிரச்னைகளை உரத்துச் சொல்லி, பெரிய அளவிலான கார்பரேட் நிறுவனங்கள் பின்னுகிற சதி வலைகளை அம்பலப்படுத்தி காப்பான் படம் மிகப்பெரிய விவசாயப் புரட்சிக்கே வித்திட்டிருக்கிறது.
விவசாயிகள் நலனில் இவ்வளவு அக்கறையோடு காப்பான் படத்தில் பங்களிப்பு செய்த நடிகர் சூர்யாவுக்கும் இயக்குநர் கே.வி.ஆனந்துக்கும் விவசாயிகள் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர்.
விவசாயத்தைச் சூழும் ஆபத்துகளை எதிர்த்து தொடர்ந்து போராடும் தங்களுக்கு காப்பான் படம் மூலமாக மிகுந்த நம்பிக்கையையும் உத்வேகத்தையும் சூர்யா ஏற்படுத்தி இருப்பதாகவும் சொன்ன விவசாய சங்க நிர்வாகிகள், டெல்டா மாவட்டங்களைப் பார்வையிடவும் அழைப்பு விடுத்தார்கள்.