ஜி.வி.பிரகாஷ் படத்தில் நடிக்கும் இயக்குநர் கெளதம் மேனன்
கே புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.என்.ராஜராஜன் தயாரிக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்கிறார். இந்த புதிய படத்தின் மூலம் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்குனராக அறிமுகமாகிறார். ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்க இருக்கிறார்.
இவர் சீமதுரை, 96, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். இவர்களுடன், இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஸ்டைலிஷ் இயக்குநரான கவுதம் வாசுதேவ் மேனனும் இப்படத்தில் நடிக்க உள்ளார். ஜி.வி.பிரகாசுடன் கவுதம் வாசுதேவ் மேனன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல்முறை. மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் வாகை சந்திரசேகர் மற்றும் அறிமுக நடிகர் குணா நடிக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இவர் அண்ணனுக்கு ஜே, வெள்ளை யானை படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர். படத்தொகுப்பை எஸ். இளையராஜா கவனிக்கிறார். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் கல்லூரி மாணவராக நடிக்கிறார். ஒரு மாணவனுக்கு கல்லூரிக்கு வெளியே நடக்கும் இன்னல்களை ஆக்ஷன் கலந்து திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். காதல், எமோஷனல், ஆக்ஷன் என முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக தயாராக இருக்கிறது.