டெல்டா பகுதி மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை – கமல்ஹாசன் காட்டம்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடந்த வாரம் கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு உதவிகளை செய்தார். மீண்டும் புயல் பாதித்த பகுதியை பார்வையிட சென்றுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட பகுதிகளை மீண்டும் பார்வையிடுவதற்காக எங்களுடைய குழுவை சார்ந்தவர்கள் இப்போது திருச்சி செல்கிறோம்.
அங்கு ஏற்பட்ட பாதிப்பு மிக மோசமான ஒரு பாதிப்பு. அதில் இருந்து அந்த மக்கள் மீண்டு வருவதற்கு சில ஆண்டுகள் ஆகலாம்.
தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டி கொடுப்பதாக அறிவித்துள்ளது. அந்த வீடுகள் கட்டி முடித்து ஒப்படைப்பதற்கு நீண்ட நாட்கள் ஆகலாம். அதுவரையில் அந்த மக்கள் தார்ப்பாய்களின் கீழ் அகதிகளாக குடியிருக்க வேண்டுமா?
எனவே இதை எல்லாம் முழுமையாக அறிந்து ஆய்வு செய்வதற்காக எங்கள் குழு தற்போது செல்கிறது.
மத்திய அரசு கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய பேரிடர் இல்லை என்று சொல்லி உள்ளது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
இந்த டெல்டா பகுதிகள் தான் நாட்டில் அனைவருக்கும் சோறு போடுகிறது. எனவே நாட்டிற்கு சோறு கொடுக்கும் ஒரு முக்கியமான பகுதி இது.
புயல் பாதித்த பகுதியை தேசிய பேரிடராக அறிவிப்பதுதான் சரியாக இருக்கும். எனக்கு தெரிந்தது எல்லாம் மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்பதுதான். அதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
பிரதமர் இவ்வளவு பெரிய பாதிப்பை நிச்சயமாக வந்து பார்த்து இருக்க வேண்டும். ஒன்றுபட்டு அதற்காக குரல் கொடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.