டெல்லி சட்டமன்றத்தில் ராஜீவ் காந்திக்கு எதிரான தீர்மானம்! – ஆதரவு அளிக்க மறுக்கும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.
சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்ப பெறவேண்டும் என்று டெல்லி சட்டமன்றத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இது தேசிய அளவில் பரபரப்பான சில மணி நேரங்களில் அப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றவில்லை என ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது.
இந்நிலையில், ராஜீவ் காந்திக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு ஆம் ஆத்மி கட்சியின் அல்கா லம்பா எம்எல்ஏ ஆதரவு அளிக்க மறுத்துள்ளார். இதனால் அவரை கட்சியில் இருந்து விலகும்படி கட்சி தலைமை நெருக்கடி கொடுத்த தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக அல்கா லம்பா கூறுகையில், “ராஜீவ் காந்திக்கு எதிரான தீர்மானத்திற்கு நான் ஆதரவு அளிக்க மாட்டேன் என கூறியதால் என் மீது கட்சினர் கோபம் கொண்டனர். ராஜினாமா செய்யுமாறு கட்சி என்னை கேட்டுக்கொண்டுள்ளது. நான் ராஜினாமா செய்யத் தயாராகவே இருக்கிறேன். ராஜீவ் காந்தி நாட்டுக்காக பல்வேறு தியாகங்களை செய்துள்ளார். எனவே அவருக்கு எதிரான தீர்மானத்தை நான் ஆதரிக்கவில்லை. எனவே, கட்சியின் விருப்பத்துக்கு எதிராக நின்றதால், என்னை பதவி விலகுமாறு கேட்கின்றனர்” என்றார். #MLAAlkaLamba