டோனி ஓய்வு குறித்து விவாதிப்பது தவறு – யுவராஜ் சிங்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரரான யுவராஜ் சிங் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டன் டோனி. அவர் இந்திய அணிக்காக பல சாதனைகளை புரிந்துள்ளார். சிறந்த கேப்டனாக இருந்துள்ளார். அவர் எப்போது ஓய்வுபெற வேண்டும் என்று அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.
டோனி இன்னும் சில நாட்கள் விளையாட வேண்டும் என்று முடிவு எடுத்தால் அதையும் நாம் மதிக்க வேண்டும். டோனி ஓய்வு குறித்து விவாதிப்பது தவறானது. இது நியாயமற்றது. மேலும் டோனியுடன் ரிஷப்பந்த் ஒப்பிடக்கூடாது.
டோனி ஒரே நாளில் உயரவில்லை. அவர் சிறந்த வீரராக உருவாக சில காலம் தேவைப்பட்டது. டோனிக்கு நெருக்கமாக செல்ல ரிஷப் பந்துக்கு நிறைய காலம் பிடிக்கும். டோனிக்கு மாற்று வீரரை கண்டுபிடிப்பதற்கு நீண்டகாலம் தேவைப்படும்.
ரிஷப்பந்த் விஷயத்தில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. அதிக அளவிலான விமர்சனங்களை அவர் எதிர்கொள்கிறார். இதை தேவையற்றது. சிறப்பாக ஆட வேண்டும் என்று அவருக்கு நெருக்கடி கொடுப்பது தவறு. ஏனென்றால் அவருக்கு நம்பிக்கை அளிப்பதன் மூலம் அவரிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வைக்க முடியும்.
ரிஷப்பந்தை விமர்சிப்பதை நிறுத்திவிட்டு கேப்டன் விராட் கோலியும், பயிற்சியாளர் ரவிசாஸ்திரியும் அவரை வழிநடத்த வேண்டும்.
ரிஷப்பந்த் வெளிநாடுகளில் டெஸ்டில் இரண்டு சதம் அடித்துள்ளார். திறமையான வீரர். அவரது ஆட்டத்தை புரிந்து கொள்ளவும், ஊக்க்கப்படுத்தவும் எதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை சுட்டிக்காட்டவும் யாராது ஒருநபர் தேவை.
அவரது குணநலன்களை புரிந்துகொள்ள வேண்டும். மேலும் அவரது மன எண்ணங்களை புரிந்து கொண்டு அதன்படி செயல்பட வேண்டும். அவரை அடக்க போகீறீர்கள் என்றால் அவரிடம் இருந்து திறமையை பெற முடியாது. அவரது மனதை புரிந்துகொண்டு வழிகாட்ட வேண்டும்.
இவ்வாறு யுவராஜ் சிங் கூறி உள்ளார்.