Tamilசெய்திகள்

தக்காளி வரத்து அதிகரிப்பு – விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கடந்த சில தினங்களுக்கு முன் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது. சென்னை, மும்பை, டெல்லி என முக்கிய இடங்களில் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கியதால் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு தக்காளி வரத்து குறைவு ஏற்பட்டது. விலை உயர்வுக்கு இது முக்கிய காரணியாக இருந்தது.

தக்காளி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த நுகர்வோருக்கு பசுமை பண்ணை கூட்டுறவு மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இது தற்காலிக விலை ஏற்றம்தான். இன்னும 10 முதல் 15 நாட்களில் தக்காளி விலை குறையத் தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் நேற்று சற்று விலை குறைந்தது. இந்த நிலையில் இன்று சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் (மொத்த விற்பனை) கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

நேற்று 400 டன் தக்காளி சந்தை விற்பனைக்கு வந்த நிலையில், இன்று அது 700 டன்னாக அதிகரித்துள்ளது. இதனால் விலை குறைவு ஏற்பட்டுள்ளது. சில்லறை விலையில் 60 ரூபாய் முதல் 70 ரூபாய் வர விற்கப்படுகிறது. வரும் நாட்களில் 1200 டன் வரை தக்காளி வரவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வந்தால் இன்னும் விலை குறைவு ஏற்படும்.