தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு போனஸ்!
தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர்கள் சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் உள்ளனர். இவர்களுக்கு முறைப்படி போனஸ் வழங்கப்படுவது கிடையாது.
கட்டுமான தொழிலாளர்களுக்கும் போனஸ் கிடைக்கும் வகையில் 1965-ம் ஆண்டு போனஸ் வழங்கும் சட்டத்தை அமல்படுத்த மாநில தொழிலாளர் நலத்துறை முடிவு செய்துள்ளது.
இந்த சட்டம் அமல் படுத்தப்பட்டால் கட்டுமான நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் அந்நிறுவனம் போனஸ் வழங்குவது கட்டாயமாக்கப்படும்.
கட்டுமான நிறுவனங்களில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்தாலும் முறைப்படி போனஸ் வழங்குவதை தொழிலாளர் நலத்துறை கண்காணிக்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து கட்டுமான நிறுவனங்கள்- தொழிலாளர்களின் கருத்துக்களை 2 மாதங்களுக்குள் பெற்று தேவையான சட்ட திருத்தத்தை அரசு செய்ய உள்ளது.
மாநில கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகள் கிடைத்து வரும் நிலையில் போனஸ் கிடைப்பதையும் சட்ட பூர்வமாக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவது வரவேற்கதக்கது என்று தொழிலாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.