தி.மு.க. வினரிடம் நல்ல விஷயத்தை எதிர் பார்க்க முடியாது – அமைச்சர் செல்லூர் ராஜூ
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
தே.மு.தி.க. எங்களுடன் வருமா? வராதா? என்று குழம்ப வேண்டாம். நல்லதையே நினைப்போம். தே.மு.தி.க. ஒரே நேரத்தில் அ.தி.முக., தி.மு.க.வுடன் பேச்சு வார்த்தை நடத்தியதை தி.மு.க. நிர்வாகி கொச்சைப்படுத்தியது தவறு. ஒவ்வொரு கட்சியும் தங்கள் தேவைக்காக கூட்டணி பேசுவது வழக்கம்தான். தி.மு.க. வினரிடம் நல்ல விஷயத்தை எதிர் பார்க்க முடியாது.
தங்கள் கட்சியை வளர்க்க வேறு வேறு இடங்களில் கூட்டணி குறித்து பேசுவது சகஜம்தான். இது எந்த கட் சியிலும் நடப்பதுதான். அதன் மூலம் கட்சி நிர்வாகிகளுக்கு பதவி பெற்றுத்தர அரசியல் கட்சிகள் செய்யும் முயற்சிதான் இது. இது தே.மு.தி.க.வில் கொஞ்சம் அதிகப்படியாக போய் விட்டதை போல தெரிகிறது. அதற்காக தே.மு.தி.க.வை குறை கூறிவிட முடியாது.
தே.மு.தி.க.வுக்கு அ.தி. மு.க. கூட்டணியை விட்டால் வேறு வழியில்லை என கூற முடியாது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனவே இன்னும் கால அவகாசம் உள்ளது.
அரசியல் களத்தில் ஒருவரை மிரட்டி எல்லாம் கூட்டணி அமைத்து விட முடியாது. நாங்கள் அமைத்துள்ளது மக்கள் விரும்பும் கூட்டணி. தேர்தல் களத்தில் தாயில்லாத பிள்ளைகளாக நிற்கிறோம். மக்கள்தான் தாயாக இருந்து எங்களுக்கு ஆறுதல் தர வேண்டும்.
ஜெயலலிதா இருந்த போது தனித்து நின்று 37 பாராளுமன்ற தொகுதிகளில் வென்றோம். இன்று நிலைமை அப்படி இல்லை. எங்களுக்கு மக்கள் செல்வாக்கு இருந்தாலும் இன்றையை சூழ்நிலைக்கு கூட்டணி தேவைப்படுகிறது.
பொங்கல் பண்டிகையின் போது ஆயிரம் ரூபாய் கொடுத்ததும், இப்போது 2 ஆயிரம் ரூபாய் வழங்க இருப்பதும் தேர்தலை நோக்கித்தான் என்பது தவறு. அ.தி.மு.க.வின் மக்கள் நல திட்டங்களை கண்டு ஸ்டாலின் தூக்கம் இல்லாமல் தவிக்கிறார். அதனால்தான் கிராமம் கிராமமாக ஓடுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.