தெலுங்கானா, ஆந்திரா நீர்நிலைகளில் அதிகரிக்கும் பிசாசு மீன்கள்! – மீனவர்கள் கவலை
பிசாசு மீன் தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. இதனை டெவில் மீன் என அழைக்கின்றனர். பிசாசு மீன்களின் முதுகெலும்புகள் மிகவும் பலம் வாய்ந்தது. வலைகளில் சிக்கும் போது அதன் எலும்புகளால் வலைகளை கிழித்து விடும். மேலும் பெரிய வலைகளில் சிக்கும் பிசாசு மீன்களை அகற்றும் போது அது மீனவர்களை எளிதில் காயப்படுத்தும்.
பிசாசு வகை மீன்களை சாப்பிட முடியாததால் அதற்கு வணிக மதிப்பு இல்லை. இதனை விற்பனை செய்வதும் கிடையாது. பிசாசு மீன்கள் மற்ற நல்ல மீன் இனங்களை தின்று அழிக்கும். மற்ற மீன்களை கண்டால் உடனே அப்படியே விழுங்கி விடும். பிசாசு மீன்கள் கடந்த 2016-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கிருஷ்ணா நதியில் முதன் முதலில் இருந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து கிருஷ்ணா நதியில் இருந்து அதன் கிளை நதிகளுக்கும் பிசாசு வகை மீன்கள் பரவியது. தற்போது பிசாசு மீன்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள 65 சதவீத நீர்நிலைகளில் பிசாசு மீன்கள் உள்ளன.
இதுகுறித்து ஆய்வு நடத்திய குழுவினர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிசாசு மீன்கள் ஆந்திரா, தெலுங்கானா மாநில நீர் நிலைகளில் அதிகரித்து வருவதாக தெரிவித்தனர். பிசாசு மீன்கள் அதிகரித்து வருவதால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நீர் நிலைகளில் வாழக்கூடிய 152 வகையான நல்ல மீன்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது மீனவர்கள் மற்றும் சுற்றுச்சூழலை கவலை அடைய செய்வதாக உள்ளது. பிசாசு மீன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இதுகுறித்து லாகோன்ஸ் என்ற குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் பிசாசு மீன் குறித்து எச்சரிக்கையும் அவர்கள் விடுத்துள்ளனர்.