Tamilசெய்திகள்

நர்சு பேச்சால் அதிர்ச்சியாகி உயிரிழந்த கூலித்தொழிலாளி! – திருப்பூரில் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் முருகானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் அன்வர் அலி (வயது 57), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சவுராமா. இவர்களுக்கு சர்மிளா பானு, ஆதிதா பானு ஆகிய மகள்களும், மன்சூர் அலிகான் என்ற மகனும் உள்ளனர். இதில் சர்மிளா பானு, ஆதிதா பானு ஆகியோருக்கு திருமணம் ஆகிவிட்டது.

அன்வர் அலிக்கு சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த 19-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு டயாலிஸ் சிகிச்சைக்காக சென்று உள்ளார். அப்போது பணியில் இருந்த நர்சு ஒருவர் அன்வர் அலியிடம் டயாலசிஸ் செய்தால் நீங்கள் இறந்துவிடுவீர்கள் என்று தெரிவித்து உள்ளார். இதைக்கேட்ட 5 நிமிடத்தில் அவர் மயங்கி விழுந்து இறந்துவிட்டார். நோயின் தன்மை குறித்து நோயாளியிடம் வெளிப்படையாக தெரிவித்ததால் அவர் இறந்ததாகவும், சம்பந்தப்பட்ட நர்சு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்வர் அலியின் உறவினர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து அன்வர் அலியின் மகள்கள் சர்மிளா பானு, ஆதிதா பானு ஆகியோர் கூறியதாவது:-

எங்களது தந்தை அன்வர் அலி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடல் முழுவதும் அரிப்பு மற்றும் உடல் சோர்வு காரணமாக அவதியடைந்து வந்தார். இதற்காக அவரை ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பதை அறிந்தனர்.

இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக கடந்த மாதம் 9-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவரை மறுநாள் 10-ந் தேதி காலையில் அரசு ஆஸ்பத்திரி புதிய கட்டிடத்தில் இயங்கும் சிறுநீரக சிகிச்சை பிரிவில் சேர்த்தோம். இதைத்தொடர்ந்து அவருக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்று எங்களிடம் டாக்டர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் அங்கு பணியில் இருந்த நர்சு ஒருவர் எங்களது தந்தையிடம் உங்களுக்கு டயாலிசிஸ் செய்தால் 90 சதவீதம் இறப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளார். இதனால் பயந்துபோன அவர் டயாலிசிஸ் செய்ய வேண்டாம் என்று கூறியவாறு ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறினார்.

இந்தநிலையில் கடந்த 19-ந் தேதி அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவரை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றோம். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் அன்று இரவு மேல்சிகிச்சைக்காக அங்குள்ள டாக்டர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு மறுநாள் 20-ந் தேதி ஏற்கனவே நாங்கள் சென்ற சிறுநீரக சிகிச்சை பிரிவுக்கு டயாலிசிஸ் செய்ய மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு பணியில் இருந்த நர்சு எங்களிடம் கையெழுத்து வாங்கினார். அதேபோல் எங்களுடைய தந்தையிடம் டயாலிஸ் செய்தால் உங்கள் உடலில் வயிற்றுப்பகுதியில் ஓட்டை போட்டு 2 லிட்டர் தண்ணீர் செலுத்தி ரத்தத்தை சுத்தம் செய்வோம். அதில் நீங்கள் உயிர் இழப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

இதை ஏன் சம்பந்தப்பட்ட நோயாளியிடம் தெரிவிக்கிறீர்கள் என்று நாங்கள் கண்டித்தோம். அதற்கு அவர்கள் இது எங்கள் பணி. நாங்கள் அவ்வாறு தான் சொல்வோம் என்று அலட்சியமாக பதில் அளித்தனர்.

இந்தநிலையில் நர்சு கூறிய வார்த்தையை கேட்டு அதிர்ச்சியடைந்த எங்கள் தந்தை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நெஞ்சை பிடித்துக்கொண்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை அங்குள்ள டாக்டர்கள் மற்றும் நர்சுகள் வார்டில் உள்ள படுக்கைக்கு அழைத்து சென்றனர். பின்னர் சிறிது நேரத்தில் எங்களுடைய தந்தை டயாலிசிஸ் செய்வதற்கு முன்பே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். எனவே எங்கள் தந்தை போன்று வேறு யாருக்கும் இந்தநிலை வரக்கூடாது. இதில் சம்பந்தப்பட்ட நர்சு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் அசோகனிடம் கேட்டபோது, கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளிடம் நோய் குறித்து தெரிவிக்கக்கூடாது என்று டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனவே டயாலிசிஸ் செய்ய வந்த நோயாளியிடம் அவரின் நிலை குறித்து நர்சு தெரிவிக்க வாய்ப்பு இல்லை.

மேலும் இங்கு வரும் நோயாளிகளிடம் கனிவாக பேசி சில புரோக்கர்கள் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்கிறார்கள். எனவே அவர்கள் இதுபோன்று நோயாளியிடம் தெரிவித்து இருக்கலாம். இதில் உண்மை தன்மை இருந்தால் சம்பந்தப்பட்ட நர்சு மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *