நீட் ஆள் மாறாட்டம் தொடர்பாக 3 புகார்கள்! – சிபிஐ விளக்கம்
தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளடர் போத்திராஜ், ‘16 மாணவர்கள் தங்களின் பெருவிரல் ரேகை பதிவுகளை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் இன்னும் வழங்கவில்லை. அந்த ரேகைகள் நாளை (இன்று) மாணவர்களிடம் இருந்து பெறப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்படும். பின்னர் இந்த ரேகை பதிவுகளை ஒப்பிட்டுப்பார்க்க 90 நாட்களாகும்’ என்றார்.
முன்னதாக, ‘நீட் ஆள்மாறாட்டம் குறித்து எத்தனை புகார்கள் இதுவரை வந்துள்ளன?’ என்று நீதிபதிகள் கடந்த முறை கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு சி.பி.ஐ. தரப்பில் வக்கீல் கே.சீனிவாசன் நேற்று பதில் அளித்தார். அவர் கூறும்போது, ‘நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக தமிழகத்தில் இருந்து 2 புகார்கள் வந்தன. அதை மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் பரிந்துரை செய்துவிட்டோம். கேரளாவில் இருந்து ஒரு புகார் வந்துள்ளது. அந்த புகாரை அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். அப்படி நீட் ஆள்மாறாட்டம் குறித்து மொத்தம் 3 புகார்கள் வந்துள்ளன’ என்று கூறினார்.
அப்போது சில தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழங்களில் பயிலும் மாணவர்கள் இதுவரை பெருவிரல் ரேகைகளை போலீசாரிடம் அளிக்காதது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அந்தந்த கல்வி நிறுவனங்களின் சார்பில் ஆஜரான வக்கீல்கள், ‘விரைவில் அந்த மாணவர்களின் ரேகை விவரங்கள் போலீசாரிடம் அளிக்கப்படும்’ என்று கூறினர்.
அப்போது நீதிபதிகள், “ஆள்மாறாட்டத்தை தடுக்க மருத்துவ மாணவர் சேர்க்கையின்போதும் மாணவர்களின் பெருவிரல் ரேகை பதிவுகளைப்பெற வேண்டும்” என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர்.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் எம்.வேல்முருகன், ‘வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது. மதிப்பெண் குறைவாக பெற்ற மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது’ என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு மருத்துவ கவுன்சில் தரப்பில், “வருங்காலத்தில் இதுபோன்ற குளறுபடிகள் நடைபெறாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பெயர்கள் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக பதிவேடுகளில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாக தேர்வுக்குழு தரப்பில் ஆஜராக வக்கீல் அப்துல்சலீம் கூறினார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக பதிவாளரையும் ஒரு எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை வருகிற 21-ந்தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அதற்குள் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக தேர்வுக்குழு பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிய மாணவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.