Tamilசினிமாதிரை விமர்சனம்

பயங்கரமான ஆளு- திரைப்பட விமர்சனம்

புதுமுகம் அரசர் ராஜா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, தயாரித்திருப்பதோடு ஹீரோவாகவும் நடித்திருக்கும் படம் ‘பயங்கரமான ஆளு’. கூடு விட்டு கூடு பாயும் வித்தையை மையமாக வைத்து, சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படம் எப்படி என்பதை பார்ப்போம்.

டிவி சேனல் ஒன்றில் பணிபுரியும் ஹீரோ சிவா, சித்தர்களை பற்றியும் அவர்களிடம் இருக்கும் கூடு விட்டு கூடு பாயும் வித்தை பற்றியும் நிகழ்ச்சி ஒன்றை தயரிப்பதற்காக தனது குழுவுடன் சித்தர் ஒருவரை தேடி காட்டுக்கு போகிறார். சிவா தலைமையில் கூடு விட்டு கூடு பாயும் நிகழ்ச்சியை டிவி சேனல் தயாரிப்பதால், அவர் மீது சக ஊழியர்கள் கோபத்தில் இருப்பதோடு, அவருடனே சென்று அவரை பழிவாங்கவும் திட்டமிடுகிறார்கள். அதே சமயம், அவரைப் போலவே இருக்கும் மற்றொருவரான இசக்கி என்பவர் சாவு கூத்து ஆடும் வேலையை செய்து வருகிறார்.

காட்டில் சித்தர் ஒருவரை சந்திக்கும் சிவாவும், அவரது குழுவினரும் தாங்கள் வந்ததன் நோக்கத்தை அவரிடம் சொல்ல, அவரோ டிவி நிகழ்ச்சிக்காக கூடு விட்டு கூடு பாயும் வித்தையை செய்ய முடியாது, இந்த இடத்தை விட்டு திரும்பி சென்றுவிடுமாறு கூறுகிறார். பிறகு திடீரென்று கூடு விட்டு கூடு பாயும் வித்தையை செய்து காட்டுவதாக ஒப்புக்கொண்டு, அதை செய்யும் போது அவரது உடலுக்கு மனித குரங்கின் மூலம் ஆபத்து வர, அந்த குரங்கிடம் போராடி சித்தரின் உடலை சிவா பாதுகாக்குகிறார். இதனால், சிவாவுக்கு எதையாவது செய்ய நினைக்கும் சித்தர், என்ன கேட்டாலும் கொடுக்கிறேன், என்று வாக்கு கொடுக்க, சிவாவோ கூடு விட்டு கூடு பாயும் வித்தையை தனக்கு சொல்லிக்கொடுக்குமாறு கேட்கிறார். அது ஆபத்தானது வேண்டாம், என்று சித்தர் எச்சரித்த பிறகும் சிவா விடாபிடியாக இருக்க, சித்தர் அவருக்கு கூடு விட்டு கூடு பாயும் வித்தையை கற்றுக்கொடுக்கிறார்.

கற்றுக்கொண்ட வித்தையை சிவா செய்து பார்க்கும் போது, ஆன்மாவின்றி இருக்கும் அவரது உடலை, அவரது எதிரிகள் எரித்துவிட, அவரது ஆன்மா உடல் இன்றி தவிக்கிறது.

இதற்கிடையே, சாவு கூத்து ஆடும் இசக்கி அவரது காதலி ரிஷா மூலம் கொலை செய்யப்பட, அவரது உடலை புதைக்க ஊர் மக்கள் முயலும் போது திடீரென்று அவர் உயிர் பிழைத்துக் கொள்கிறார்.

முரட்டுத்தனமும், வக்கிரப்புத்தியும் கொண்ட இசக்கியின் உடலில், அமைதியான ஆன்மீகவாதியான சிவாவின் ஆன்மா புகுந்துக்கொள்ள, அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் மீதிக்கதை.

முதல் படத்திலேயே இயக்கம், தயாரிப்பு நடிப்பு என்று பல அவதாரங்களை எடுத்திருக்கும் அரசர் ராஜா, இரட்டை வேடத்திலும் நடித்து அசத்தியிருக்கிறார். நல்லவன், கெட்டவன் என்று இரண்டு வேடங்களின் வித்தியாசங்களை தனது உடல் தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் வேறுபடுத்தி காட்டியிருக்கும் அரசர் ராஜா, ஆக்‌ஷன் காட்சிகளை அசால்டாக கையாண்டிருக்கிறார்.

ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் ரிஷா, இந்த படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மற்றொரு ஹீரோயினான சாராவும் தனது பணியை சரியாக செய்திருக்கிறார்.

கஞ்சா கருப்பு மற்றும் போண்டா மணி ஆகியோரது புதையல் தோண்டும் காட்சிகள் நம்மை சிரிக்க வைப்பது போல, மனித குரங்குகளின் அட்வெஞ்சர் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

படத்தில் ஏராளமான புதுமுகங்கள் நடித்திருந்தாலும், அனைவரும் தங்களது வேலையை மிக சரியாக செய்திருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் எத்தனையோ பேய் படங்களும், காமெடி படங்களும் வந்திருந்தாலும், கூடு விட்டு கூடு பாயும் வித்தையை மையமாக வைத்து, அதுவும் அதன் ரகசியங்களை சொல்லும் படங்கள் என்பது ரொம்ப குறைவு தான். அந்த குறையை போக்கும் விதத்தில் இப்படம் உள்ளது.

சித்தர்கள் பற்றியும், கூடு விட்டு கூடு பாயும் வித்தை பற்றியும் பல விஷயங்களை நுணுக்கமாக கையாண்டிருக்கும் இயக்குநர் அரசர் ராஜா, திரைக்கதையை விறுவிறுப்பாக அமைத்ததோடு, எந்த இடத்திலும் போராடிக்காத வகையில் காட்சிகளையும் கச்சிதமாக வடிவமைத்திருக்கிறார்.

படத்திற்கு பின்னணி இசை எவ்வளவு முக்கியம், என்பதை ரொம்ப நன்றாகவே புரிந்துக்கொண்ட இசையமைப்பாளர் தஷி, தனது பின்னணி இசை மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். கபிர் அலிகானின் இசையில் இடம்பெற்ற இரண்டு பாடல்களும் கேட்கும் ரகங்களாக உள்ளன. ஒளிப்பதிவாளர் செல்வமணியின் கேமரா ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டியிருப்பதோடு, பல புதிய லொக்கேஷன்களை தேடி பிடித்து படம்பிடித்து காட்சிகளுக்கு கூடுதல் மெருகேற்றியிருக்கிறார்.

அரசர் ராஜா, சிறிய பட்ஜெட்டில் இந்த படத்தை எடுத்திருந்தாலும், அவர் எடுத்துக்கொண்ட களம் மிகப்பெரியதாக இருக்கிறது. படத்தில் சில இடங்களில் சில குறைபாடுகள் இருந்தாலும், விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக இப்படம் உள்ளது.

மொத்தத்தில், இந்த ‘பயங்கரமான ஆளு’ பார்க்க வேண்டிய படம் தான்.

-ஜெ.சுகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *