Tamilசெய்திகள்

பாகிஸ்தான் சிறையில் 503 இந்திய மீனவர்கள்! – மத்திய அமைச்சர் தகவல்

பாகிஸ்தான் சிறையில் 503 இந்திய மீனவர்கள் இருப்பதாக மக்களவையில் மத்திய மந்திரி வி.கே.சிங் கூறினார்.

பாராளுமன்ற மக்களவையில் மத்திய மந்திரி வி.கே.சிங் எழுத்துபூர்வமாக நேற்று அளித்த பதிலில் கூறியதாவது:

மத்திய அரசு எடுத்த முயற்சியின் காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு முதல் இதுவரை பாகிஸ்தான் சிறையில் கைதிகளாக இருந்த 1,725 மீனவர்கள் உள்பட இந்தியர்கள் 1,749 பேர் விடுவிக்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டனர். மேலும் மீனவர்களின் 57 படகுகளும் மீட்கப்பட்டன. கடந்த ஆண்டில் மட்டும் மீனவர்கள் உள்பட 179 இந்தியர்கள் பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

பாகிஸ்தான் ஜனவரி 1-ந் தேதி அளித்த அறிக்கையில், தங்கள் நாட்டில் உள்ள சிறையில் 483 மீனவர்கள் அடைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளது. ஆனால் 503 மீனவர்கள் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் மீனவர்களின் 1,050 படகுகளையும் பாகிஸ்தான் பறிமுதல் செய்துள்ளது. அது பற்றிய தகவலை பாகிஸ்தான் தங்கள் அறிக்கையில் தெரிவிக்கவில்லை. அவர்களை விடுவிக்கவும், படகுகளை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இலங்கை கடற்படையினரால் தமிழக, புதுச்சேரி மீனவர்கள் தாக்கப்பட்டு கைது செய்யப்படுவதாகவும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதாகவும் அந்த மாநில அரசுகள் மற்றும் மீனவர் அமைப்புகள் எழுதிய கடிதம் எங்களுக்கு வந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இது போன்ற சம்பவங்கள் மிகவும் குறைந்து உள்ளது. தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து இந்தியா வந்த இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவிடம், பிரதமர் நரேந்திர மோடி பேசி உள்ளார்.

வளைகுடா நாடுகளில் 4 ஆயிரத்து 705 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். வெளிநாடுகளில் தண்டனை காலம் முடிந்தும் 434 இந்தியர்கள் சிறையில் இருக்கின்றனர். இதில் 396 பேர் பாகிஸ்தான் சிறையில் உள்ளனர். அவர்கள் அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வெளிநாடுவாழ் இந்திய பெண்கள் தங்கள் கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினரால் கொடுமை செய்யப்படுவது தொடர்பாக 5 ஆயிரத்து 379 புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக விசாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *