பா.ஜ.க கூட்டணி விவகாரம்! – எம்.பி களுக்கு உத்தவ் தாக்கரே அறிவுரை
சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, கட்சி எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் நேற்று முன்தினம் மாதோ இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்த சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், “பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்தாலும் எப்போதும்போல் நாங்கள் தான் பெரிய அண்ணனாக இருப்போம். கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் எனில் பா.ஜனதா எங்களிடம் வரவேண்டும்” என்று கூறினார்.
இதற்கு சுடச்சுட பதில் அளித்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், “நாங்கள் சிவசேனாவுடன் கூட்டணி வைக்கவேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் அப்படி வைத்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இல்லை” என பதில் அளித்தார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பா.ஜனதா, சிவசேனா கட்சிகளிடையே நிலவி வரும் இந்த கருத்துவேறுபாடு காரணமாக கூட்டணி அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று எம்.பி. எம்.எல்.ஏ.க்களுடனான பேச்சுவார்த்தையின் போது சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறிய தகவல்களை அவரது நெருங்கிய உதவியாளரான ஹர்சால் பிரதான் நேற்று வெளியிட்டார்.
இதில், “ சிவசேனா இந்த தேர்தலில் தனது முழு பலத்தையும் பயன்படுத்தி போராடும். பதவியில் இருக்கும் அனைத்து எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் தங்கள் தொகுதியில் நிலவும் பிரச்சினைகளில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். மற்றொரு முறை தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உங்களிடம் இல்லை என்றால் மற்றவர்களுக்கு வழிவிடுங்கள்.
பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்கும் விவகாரத்தை என்னிடம் விட்டுவிடுங்கள்” என்று உத்தவ் தாக்கரே அவர்களிடம் கேட்டுக்கொண்டதாக ஹர்சால் பிரதான் கூறினார்.
மேலும், பயிர்க்காப்பீடு கட்டணம் மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து விவசாயிகளிடம் விசாரிக்குமாறும், களத்தில் இறங்கி வேலை செய்யுமாறும் உத்தவ் தாக்கரே அவர்களிடம் கோரியதாக தெரிவித்தார்.