Tamilசினிமா

பிரகாஷ்ராஜுக்கு பதிலடி கொடுத்த நடிகை கஸ்தூரி

ராஜ்குமார் இயக்கத்தில் ‌ஷயாஜி ஷிண்டே நடித்துள்ள ‘அகோரி’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி தனியார் திரையரங்கில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குனர் கே.பாக்யராஜ் பேசியதாவது:-

‘தமிழக மக்களை நினைத்தால் தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எந்த கட்சிக்காரன் காசு கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு, சத்தியம் செய்து கொடுக்கிறார்கள். ஆனால் ஏதோ ஒரு கட்சிக்கு வாக்களிக்கிறார்கள். இவர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்று எண்ணி எண்ணியே எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

ஆனால் இங்கே பேசிய கஸ்தூரி ஒரு ஏதோ ஒரு முடிவுடன் தான் இருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆர்பி.பாலா மொழி மாற்றுப் படங்களுக்கான வசனகர்த்தா என்று சொன்னார்கள். ‘புலி முருகன்’ மற்றும் ‘லூசிபர்’ ஆகிய படங்களுக்கு வசனம் எழுதி இருப்பதாகச் சொன்னார்கள்.

நான் ஒரே ஒரு டப்பிங் படத்திற்கு மட்டும்தான் வசனம் எழுதினேன். அங்கு சென்றவுடன் தான் அதில் உள்ள சவால்களும், சங்கடங்களும் புரிந்தன. அதன் பிறகுதான் டப்பிங் படத்திற்கு வசனம் எழுதுவதற்கும் ஒரு திறமை வேண்டும் என்பதை உணர்ந்தேன்.

‘அகோரி ’படத்திற்கு இந்த டைட்டில் பெரிய பிளஸ். பேய் வந்து பழிவாங்குகிறது என்று ஒரு கான்செப்ட் தற்போது மக்களால் ரசிக்கப்படுகிறது. அகோரி என்பதை நான் நெகட்டிவ் என்று நினைத்திருந்தேன். ஆனால் இவர்கள் அதனை பாசிட்டிவாக காட்டியிருப்பதாக நினைக்கிறேன்’

இவ்வாறு அவர் கூறினார்.

தயாரிப்பாளர் பிடி.செல்வகுமார் பேசியதாவது:-

பிரகாஷ்ராஜ் டெல்லியில் ஒரு வி‌ஷயத்தை சொல்லி இருக்கிறார். அவர் அங்கு சொன்ன கருத்தை இங்கு வந்து சொல்லவேண்டும். இங்கு வளர்ந்தவர் அவர். பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டு தமிழ் ரசிகர்களால் வளர்ந்தவர். இங்கு எங்களது வேலை வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன.

எனவே அதேபோல் இங்கும் வந்து எங்கள் மாணவர்களின் கல்வியும் இளைஞர்களின் வேலை வாய்ப்பும் பறிபோவதை பற்றி பேசவேண்டும். இல்லை என்றால் தமிழகம் அவரை புறக்கணிக்கும்.’

இவ்வாறு செல்வகுமார் பேசினார்.

நடிகை கஸ்தூரி பேசியதாவது:-

‘பிடி.செல்வகுமார் கூறியபடி தமிழகத்தில் வளர்ந்தவர்கள் தமிழகத்தை விட்டுக்கொடுக்க கூடாது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தமிழ்நாட்டு மாணவர்கள் டெல்லியில் மட்டும்தான் வேலைக்கு செல்கிறார்கள், பதவியை பறித்துக்கொள்கிறார்கள் என்று இல்லை. நாடு முழுக்கவே தமிழர்கள் பணியாற்றுகிறார்கள். காரணம் தமிழர்கள் அறிவாளிகள். அவர்கள் திறமை வி‌ஷயத்தில் வேறு மாநிலத்தவர்கள் அடித்துக் கொள்ள முடியாது.

மே23-ந்தேதிக்கு பிறகு தமிழகம் தான் கிங் மேக்கராக திகழப்போகிறது. அதைத் தெரிந்துதான் கன்னடக்காரர்கள் சின்ன சின்ன வி‌ஷயங்களுக்காக பேச தொடங்கியுள்ளனர். நாம் தலை நிமிர நிமிர மற்றவர்கள் பீதி அடையத் தான் செய்வார்கள்.

தமிழர்கள் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். அதனால்தான் எங்கு போனாலும் அவர்களுக்கு மதிப்பு மரியாதையும் இருக்கிறது. தங்கள் திறமையால் தான் உலகில் எங்கு சென்றாலும் முன்னணியில் இருக்கிறார்கள். ஜெயிக்கிறார்கள்.

இந்தத் திரைப்படத்திலும் பல திறமைசாலிகள் இருக்கிறார்கள். இந்த அகோரியும் அடுத்த காஞ்சனாவாக இருக்கும் என்று நம்புகிறேன். கிராபிக்ஸ் காட்சிகளை பார்க்கும்போது பாகுபலிக்கு நிகரான காட்சிகளை உணர்ந்தேன்.’

இவ்வாறு கஸ்தூரி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *