பிரதமர் மோடிக்கு எதிராக போர் கொடி உயர்த்திய பா.ஜ.க எம்.எல்.ஏக்கள்!
அசாம் மாநிலத்தில் சர்பானந்தா சோனோவால் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடந்து வருகிறது.
என்றாலும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்தை இந்த மாநில மக்கள்தான் முதன் முதலில் கடுமையாக எதிர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குடியுரிமை சட்ட திருத்தத்தால் அசாமில் உள்ள பழங்குடி இன மக்கள் பெங்காலிகளிடம் தங்கள் பாரம்பரிய பண்பாட்டை இழக்க நேரிடும் என்ற அச்சத்தால் அங்கு போராட்டம் வெடித்தது. மத்திய அரசு மீது கோபம் அடைந்த அசாம் மாநில அனைத்து மாணவர் அமைப்புளும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்களை சூறையாடி தீ வைத்தனர்.
திப்ரூகர் தொகுதி எம்.எல்.ஏ. பிரசாந்த் புகன் வீடும் போராட்டக்காரர்களால் தீ வைத்து நாசமாக்கப்பட்டது. முதல்-மந்திரி சோனோவால் வீடு தீ வைக்கப்படுவது முறியடிக்கப்பட்டது.
இந்த நிலையில் 12 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் பிரதமர் மோடியையும், மத்திய அரசின் கொள்கையையும் எதிர்த்துள்ளனர். இது தொடர்பாக எம்.எல்.ஏ.க்கள் கோஷ்டிக்கு தலைமை வகித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. பத்மா ஹசரிகா கூறியதாவது:-
குடியுரிமை சட்ட திருத்தம் என்பது பா.ஜ.க.வின் கொள்கை என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். எனவே நாங்கள் கட்சியின் கொள்கையை எதிர்க்க வில்லை. ஆனால் அசாம் மாநில மக்களின் நலமும், பாரம்பரிய பண்பாடு சிறப்பும் எங்களுக்கு முக்கியமானது.
அசாம் மாநிலத்தின் பழமை கலாச்சாரத்தை காப்பாற்ற மத்திய-மாநில அரசுகள் மாற்று நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். குறிப்பாக குடியுரிமை சட்ட திருத்தம் விவகாரத்தில் பிரதமர் மோடி அவசியம் ஏதாவது ஒரு முடிவை உடனடியாக எடுக்க வேண்டும்.
அசாமில் கடந்த 8 நாட்களாக பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாதபடி பயத்தில் உள்ளனர். நாங்களும் பயத்தின் பிடியில் தான் இருக்கிறோம். கடந்த 8 நாட்களாக வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கியுள்ளோம்.
எத்தனை நாட்களுக்குத்தான் நாங்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்க முடியும். எனவேதான் முதல்- மந்திரியை சந்தித்துப் பேசினோம். டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசுமாறு கேட்டுக் கொண்டோம்.
அசாமில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டியது அவசியமாகும். நாங்கள் கட்சியில் இருந்தும், ஆட்சியில் இருந்தும் விலகினால்தான் பிரச்சினை தீரும் என்றால் நாங்கள் 12 பேரும் ராஜினாமா செய்யவும் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு பா.ஜ.க. எம்.எல்.ஏ. பத்மா ஹசரிகா கூறினார்.