பீகாரில் துப்பாக்கி முனையில் நடத்தப்பட்ட திருமணம் – நீதிமன்றம் ரத்து செய்தது
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள போகாரா இரும்பு நிறுவனத்தில் சீனியர் மேனஜராக வேலைப்பார்த்து வருபவர் வினோத் குமார். இவர் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3-ம் தேதி திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஹதியா-பாட்னா விரைவு ரெயிலில் சென்றுள்ளார். திருமணம் முடிந்த பிறகும் வினோத் வீடு திரும்பவில்லை.
இதற்கிடையில் வினோத்தின் சகோதரர் சஞ்சய்க்கு அடையாளம் தெரியாத நபர் போன் செய்து வினோத்திற்கு கட்டாய திருமணம் நடந்ததாக கூறினார். இதனால் சந்தேகமடைந்த வினோத்தின் சகோதரர் சஞ்சய் குமார் போலீசில் புகார் அளித்தார்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் வினோத்திற்கு நடந்த கொடுமை தெரியவந்துள்ளது. வினோத்தை பண்டாரக் பகுதியைச் சேர்ந்த சிலர் கடத்திச் சென்று ஒரு பெண்ணிற்கு கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர். வினோத் திருமணத்திற்கு மறுத்த போது அவரை அடித்து துப்பாக்கியை காட்டி மிரட்டி பெண்ணிற்கு தாலி கட்ட வைத்துள்ளனர்.
வினோத் கண்ணீர் மல்க தாலி கட்டிய புகைப்படங்கள், வீடியோ இணையத்தளங்களில் பரவியது. இது குறித்து தெரிந்ததும் சஞ்சய் குமார் உள்ளூர் போலீசின் உதவியுடன் வினோத்தை மீட்டு அழைத்து வந்தார்.
திருமணம் செய்த பெண்ணை ஏற்றுக்கொள்ளுமாறு வினோத்தின் குடும்பத்திற்கு மிரட்டல்கள் வந்துள்ளன. இதுகுறித்து வினோத் போலீசாரிடம் புகார் அளித்தார். தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
வினோத் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு பீகார் கோர்ட்டுக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வினோத்துக்கு நடத்தப்பட்ட கட்டாய திருமணம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.