Tamilசெய்திகள்

மதுரையில் நடக்க இருக்கும் அதிமுக மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற கட்சி தலைமை முடிவு

மதுரையில் வருகிற 20-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வான பிறகு நடைபெறும் முதல் மாநில மாநாடு என்பதால் தொண்டர்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோரை திரட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் வியூகம், பாரதிய ஜனதா கட்சியுடனான உறவு, கூட்டணி கட்சிகளின் அணுகுமுறை மற்றும் கட்சி வளர்ச்சி தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றுவதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.

மேலும் அ.தி.மு.க. கொடியை பயன்படுத்தி வரும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் சசிகலா, டி.டி.வி.தினகரன் தொடர்பாகவும் முக்கிய தீர்மானங்கள் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக அண்ணாமலை வந்தது முதல் தொடர்ந்து அ.தி.மு.க. குறித்தும், முன்னாள் அமைச்சர்கள் குறித்தும் பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்.

கடந்த வாரம் பேட்டி அளித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பிரதமர் மோடி எங்களை பற்றி புரிந்துகொண்ட அளவுக்கு கூட அண்ணாமலை புரிந்து கொள்ளவில்லை என்றார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் சமீபத்தில் நடைபயணம் தொடங்கி மதுரை வந்த அண்ணாமலை, அரசியல் விஞ்ஞானிகளுக்கெல்லாம் பதில் கூறி என்னை தரம் தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை என்று செல்லூர் ராஜூவை விமர்சனம் செய்தார். இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே உச்சக்கட்ட வார்த்தைபோர் ஏற்பட்டு தற்போது அமைதி நிலவுகிறது.

இதையடுத்து அண்ணாமலை திடீரென தனது பாதயாத்திரையை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினார். 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் விருதுநகரில் நடைபயணத்தை தொடங்கிய அவர் அ.தி.மு.க. குறித்து எதுவும் பேசாமல் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார். ஆனால் அவரது நெருங்கிய ஆதரவாளரும் மதுரை பா.ஜ.க. தலைவருமான மகா சுசீந்திரன், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டுகளை வெளியிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 66 இடங்களில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. அதன் பிறகு நடந்த, உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜனதா கூட்டணியின்றி தனித்துப் போட்டியிட்டபோது தோல்வியடைந்தது என்று கூட்டணிக்கு தலைமை தாங்கும் அ.தி.முக.வை மிரட்டும் வகையில் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த கடிதம் பகிரங்கமாக வெளியான பிறகும் மகா சுசீந்திரனின் இந்த கடித விவகாரத்தில் அண்ணாமலை எதுவும் கூறாததால், பா.ஜ.க. மாவட்டத் தலைவருக்கு அவர் ஆதரவாகவே இருப்பதாக அ.தி.மு.க.வினர் கருதுகிறார்கள். இதனிடையே கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க.வுடன் கூட்டணி வைத்திருந்தபோது, பா.ஜ.க. 19 சதவீத வாக்குகளை பெற்றது என்றும், அதேபோல் வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் மூன்றாவது அணி அமைத்து போட்டியிட அண்ணாமலை ஆதரவாளர்கள் அழுத்தம் கொடுத்து வருவதாகவும், கூறப்படுகிறது.

இந்த அணியில் அ.ம.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. மற்றும் பிற கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைத்து போட்டியிட்டால் மீண்டும் பிரதமராக நரேந்திர மோடிக்கு மக்கள் ஆதரவு அதிகரிக்கும். இதனால் தமிழகத்தில் அ.தி.மு.க.வை விட அதிக வாக்குகளை பெறமுடியும். அதே கூட்டணி 2026-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் அதிக தொகுதிகளை வெல்லலாம் என்றும் பா.ஜ.க. கணக்கு போட்டு வருகிறது.

பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அ.தி.மு.க. தன் பங்கிற்கு, அக்கட்சியின் சிறுபான்மை பிரிவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜாவை மீண்டும் கட்சியில் இணைத்துள்ளது. அன்வர்ராஜா பா.ஜ.க.வுக்கு எதிராக பேசியதால் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர். தற்போது அவர் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்கப்பட்டது பா.ஜனதாவுக்கு எதிராக விமர்சனத்தை தொடர்வதற்காகவே என்று பா.ஜனதா மாநில தலைமை நினைக்கிறது.

இதற்கிடையே மதுரையில் வருகிற 20-ந்தேதி அ.தி.மு.க.வின் பிரமாண்ட எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பாராளுமன்ற தேர்தல் குறித்து, முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மற்றும் அ.தி.மு.க. தலைவர்களின் பேச்சுக்கள் பாராளுமன்ற தேர்தல் வியூகத்தைக் குறிக்கும் வகையில் அமையும் என்றும் கூறப்படுகிறது.

எனவே தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி வருகிற பாராளுமன்ற தேர்தலில் தொடருமா என்ற கேள்விக்கு அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டில் விடை கிடைக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கணித்துள்ளனர்.