மீண்டும் டப்பிங் யூனியன் தலைவரானார் ராதாரவி!
டப்பிங் யூனியன் தேர்தல் வரும் 15ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நடிகர் ராதாரவி தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ராமராஜ்யம் அணியின் சார்பில் சின்மயி போட்டியிட்டார். இதையடுத்து கடந்த மாதம் 30ந்தேதி மனு தாக்கல் செய்வதற்காக சென்னை வடபழனியில் உள்ள டப்பிங் யூனியன் அலுவலகத்திற்கு சின்மயி வந்தார்.
’மீ டூ’ விவகாரத்தின் போது டப்பிங் யூனியனில் சந்தா தொகை செலுத்தாத காரணத்தால் சின்மயி நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனவே டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்ட சின்மயி உள்ளே வரக்கூடாது என ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் தலையிட்டு சமாதானப்படுத்தி அவரை உள்ளே அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து சின்மயி மனு தாக்கல் செய்தார்.
ஆனால், உறுப்பினராக இல்லாத பட்சத்தில் அவரது மனு ஏற்று கொள்ளப்படுமா? என்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதுகுறித்து நிருபர்களிடம் கூறிய சின்மயி, எந்த காரணமும் இல்லாமல் விளக்கமும் கொடுக்காமல் சங்கத்தில் இருந்து தன்னை நீக்கியது ஏன்? வாழ்நாள் உறுப்பினர் அட்டை வைத்திருப்பதால் தேர்தலில் போட்டியிட போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், பாடகி சின்மயி வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. இதனால் டப்பிங் யூனியன் தேர்தலில் தலைவர் பதவிக்கு ராதாரவி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.