மு.க.ஸ்டாலினை தாக்கி கட்டுரை வெளியிட்ட அதிமுக நாளிதழ்!
அ.தி.மு.க.வின் அதிகார பூர்வ நாளேடான நமது அம்மாவில் குத்தீட்டி என்ற பெயரில் மு.க.ஸ்டாலின் பற்றி விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
காவேரி தண்ணீரை தமிழகத்திற்கு கரைபுரள விடமாட்டோம் என கங்கணம் கட்டி செயல்படுவது கர்நாடகத்தை ஆளுகிற காங்கிரஸ் கூட்டணி அரசு என்றிருக்க, அந்த காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்துக் கொண்டே, மேகதாதுக்கு எதிராகப் போராட்டம் என்று தி.மு.க. நடத்துவது பித்தலாட்டத்தின் உச்சமல்லவா?
இப்படித்தான், இத்தாலி காங்கிரசோடு அன்றும் இணை பிரியாமல், மத்தியிலே கூட்டணி ஆட்சி நடத்திக் கொண்டு, ஈழத்து இன அழிப்பை முன்னின்று நடத்துவதற்கு துணை போன தி.மு.க. மொத்தத்தையும் முடித்துவிட்டு தமிழினத்தை ஏமாற்ற அண்ணாவின் கல்லறையை, உண்ணா நோன்பு நாடகம் நடத்தும் மேடையாக்கி, உலகமே சிரிக்க மோசடி கூத்து நடத்தியது.
அவ்வழியிலேயே இப்போதும் தமிழின துரோக காங்கிரசோடு கூட்டணியை தொடர்ந்து கொண்டே, தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்றும் தரங்கெட்ட கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்துவதாக செயல் தலைவர் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்.
பாராளுமன்றத்திலே சிறு குறு வணிகத்தில் அந்நிய முதலீட்டை ஆதரிப்பதாக வாக்களித்துவிட்டு தமிழகத்து வணிகர்களை ஏமாற்ற இங்கே வந்து வால்மார்ட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தியது.
அது போலவே, பொன் விளையும் பூமியை புல்லும் முளைக்காத பாலைவனமாக்கவும், விளைநிலங்களை வெடிகுண்டு கிட்டங்கிகளாக்கும் விபரீதங்கள் நிகழ்த்தவும், அன்றைய காங்கிரஸ் ஆட்சியில் அணி வகுத்த மீத்தேன், கெயில் உள்ளிட்ட திட்டங்களுக்கு ஒரு பக்கம் ஒப்பந்தக் கையெழுத்து போட்டுக் கொடுத்துவிட்டு, மறுபக்கம் மீத்தேனுக்கு எதிர்ப்பு என்று கனிமொழியை அனுப்பி கண்டனக் கடிதம் கொடுப்பதுமாக, காலமெல்லாம் தி.மு.க. ஆடி வரும் மோசடி கூத்தில் மேலும் ஒன்றாகவே அமைகிறது மேகதாதுவுக்கு எதிராக தி.மு.க.வின் அனைத்துக் கட்சிக் கூட்டமும், ஆர்ப்பாட்டமும்.
மேகதாதுவில் கர்நாடக காங்கிரஸ் அரசு அணை கட்டினால், அந்த காங்கிரஸ் கட்சியோடு வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி வைக்க மாட்டோம் என்று ஒரு வார்த்தை பேசுவதற்கு துப்பில்லாத தி.மு.க. இன்னும் எத்தனை நாடகங்கள் நடத்தினாலும், நற்றமிழ் பூமி அதனை ஒரு நாளும் நம்பாது… காரணம்… காவேரி கன்னடர்க்கு, கச்சத்தீவு சிங்களர்க்கு… முல்லையாறு கேரளர்க்கு… முள்ளிவாய்க்கால் மட்டுமே தமிழர்க்கு என்று இடஒதுக்கீடு பெற்றுத்தந்த துரோக இயக்கம் தி.மு.க. என்பதை ஒவ்வொரு தமிழனும் உதிரத்தில் அல்லவா எழுதி வைத்துள்ளான்.
அதனால் குறிஞ்சிமலர் நடிகர் ஸ்டாலின் போடுகிற கூப்பாடு ஒருநாளும் அரசியலுக்கு பயன்தராத அரை வேக்காடுதானே.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.