ரசிகர் மன்ற நிர்வாகிளுடனான சந்திப்பில் விஜய் என்ன பேசினார்? – விஜய் மக்க இயக்க நிர்வாகி விளக்கம்
விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடிகர் விஜய் தொடர்ச்சியாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இவர் சமீபத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்து விளங்கிய மாணவ- மாணவிகளை 234 தொகுதி நிர்வாகிகள் மூலம் கண்டறிந்து ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இடையே இந்த நிகழ்ச்சி பெறும் வரவேற்பை பெற்றது.
இதையடுத்து இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற காரணமாக இருந்த 234 தொகுதியில் உள்ள மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நேற்று முன் தினம் விஜய் ஆலோசனை நடத்தினார். பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனை கூட்டம் மாலை 5.30 மணி வரை நடந்தது. இதில் 50 சதவீத மாவட்ட நிர்வாகிகளை விஜய் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
விஜய் 2-வது நாளாக நேற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, ஈரோடு, கடலூர், வேலூர், திருப்பத்தூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சிவகங்கை, தர்மபுரி உள்ளிட்ட 10-க்கு மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
நிகழ்ச்சி முடிந்ததும் பத்திரிகையாளர்களை சந்தித்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் கூறியதாவது, விஜய் நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்தார் மற்றும் அவர்களது குடும்பத்தை பார்த்துக் கொள்ள கூறினார். இலவச பாடசாலை குறித்து விஜய்யிடம் அனுமதி பெற்றபின் முறையான அறிவிப்பு வெளியாகும் என கூறினார்.