Tamilசெய்திகள்

விஜய் மல்லையா நாடு கடத்துவது தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைப்பு

நாடு அறிந்த தொழில் அதிபரும், கிங் பி‌ஷர் நிறுவனங்களின் தலைவருமான விஜய் மல்லையா (வயது 62), பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு வட்டியுடன் திருப்பி செலுத்தாமல், இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு தப்பி விட்டார்.

அவர் மீது இந்திய கோர்ட்டுகளில் சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் வழக்குகள் போட்டுள்ளன.

இந்த வழக்குகளை அவர் எதிர்கொள்வதற்காக, அங்கிருந்து இங்கு நாடு கடத்திக்கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது.

இது தொடர்பான வழக்கில் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ந் தேதி விசாரணை தொடங்கி, தொடர்ந்து நடைபெற்றது.

இங்கிலாந்து அரசின் சி.பி.எஸ். வக்கீல்கள் குழுவினர் மார்க் சம்மர்ஸ் தலைமையில் ஆஜராகி விஜய் மல்லையா, வங்கிக்கடன் மோசடியிலும், சட்டவிரோத பண பரிமாற்றத்திலும் ஈடுபட்டதற்கு அடிப்படை ஆதாரம் இருப்பதாக இந்திய அரசின் தரப்பில் வாதிட்டனர்.

அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என அவர்கள் குறிப்பிட்டனர்.

கிளாரே மான்ட்கோமெரி தலைமையிலான விஜய் மல்லையா தரப்பு வக்கீல்கள், தொழிலில் ஏற்பட்ட தோல்வியால்தான் அவர் கடனை திருப்பி செலுத்தவில்லை, நேர்மையற்ற விதத்தில் மோசடியில் ஈடுபடவில்லை என வாதிட்டனர்.

மேலும் பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு, மொத்த கடன்களில் 80 சதவீதத்தை அவர் 2016-ம் ஆண்டு திரும்பச்செலுத்த முன்வந்தபோது அதை ஏற்க மறுத்து விட்டது எனவும் கூறினர்.

இப்படி இரு தரப்பிலும் தொடர்ந்து வாதங்கள், எதிர் வாதங்கள் நடைபெற்றன.

அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *