Tamilசினிமாதிரை விமர்சனம்

ஹவுஸ் ஓனர்- திரைப்பட விமர்சனம்

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில், ‘பொல்லாதவன்’ கிஷோர், ‘பசங்க’ கிஷோர், சிவரஞ்சனி, லவ்லின் சந்திரசேகர் ஆகியோரது நடிப்பில் வெளியாகியிருக்கும் ஹவுஸ் ஓனர் எப்படி என்று பார்ப்போம்.

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான கிஷோரும், அவரது மனைவி சிவரஞ்சனியும் ஒரு வீட்டில் வசித்து வருகிறார்கள். கிஷோரின் கனவு இல்லமான அந்த வீடு அவருக்கு ரொம்பவே பிடித்தனமான வீடு, என்பதால் அவரை அவரது குடும்பத்தார் செல்லமாக ‘ஹவுஸ் ஓனர்’ என்று அழைக்கின்றனர்.

அல்சைமர் என்ற ஞாபகமறதி நோயால் அவதிப்படும் கிஷோர், தனது மனைவியையே மறந்து போகும் அளவுக்கு பாதிக்கப்படுகிறார். அனைத்து நினைவுகளையும் மறந்தாலும், தனது இளமை கால நினைவுகளை மட்டும் அவ்வபோது நினைத்துக் கொள்ளும் கிஷோர், முதுமையில் மனைவியை மறந்து போனாலும், இளமையில் அவரை அன்போடும், அக்கறையோடும் கவனித்துக் கொண்டதை நினைத்துக் கொள்கிறார்.

இனிமையான இளமைகால நினைவுகளோடு மட்டும் வாழும் கிஷோர், முதுமை காலத்தில் மற்றவர்களுக்கு ஆத்திரமூட்டும் வகையில் அனைத்தையும் மறந்து வாழ்ந்தாலும், அவரை அவரது மனைவி சிவரஞ்சனி குழந்தையை போல கவனித்துக்கொள்கிறார்.

இதற்கிடையே, திடீரென்று பெய்யும் பெரும் மழையால் சென்னையே வெள்ளக்காடாக மாற, மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி பயணிக்கிறார்கள். ஆனால், கிஷோரின் உடல் நிலையால் அந்த வீட்டை விட்டு வெளியேற முடியாமல் சிவரஞ்சனியும், கிஷோரும் வெள்ளத்தில் சிக்கிக்கொள்ள அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் மீதிக்கதை.

2015 ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் நடந்த ஒரு சம்பவத்தை மையமாக வைத்துக் கொண்டு இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன், கணவன், மனைவியின் பந்தத்தை ரொம்ப அழகாக
காட்டியிருக்கிறார்.

சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் நிற்கும் தம்பதியர், இப்படத்தை பார்த்தால், வாழ்க்கை என்றால் என்ன?, கணவன், மனைவி என்றால் யார்?, என்பதை தெரிந்துக் கொள்வதோடு, “வாழ்ந்தல இவங்கள போல வாழனும்” என்றும் நினைக்க வைக்கும் அளவுக்கு கணவன், மனைவி பந்தத்தை எளிமையாகவும், அழுத்தமாகவும் காட்டியிருக்கிறார் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன்.

அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவராக கிஷோர் முதியவர் வேடத்தில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். ஞாபகமறதியால் அருகில் இருப்பவரை யாரென்றே தெரியாத கிஷோர், இருட்டை பார்த்தால் பயப்படுவது, திடீரென்று கோபப்படுவது, இளைமைகால நினைவுகளால் சந்தோஷப்படுவது என்று தனது வேலையை சரியாக செய்திருந்தாலும், அவரை விட பல மடங்கு சிறப்பான நடிப்பை சிவரஞ்சனி வெளிப்படுத்தியிருக்கிறார்.

மனைவியையே யார்? என்று கேட்கும் கணவரை குழந்தைப் போல பார்த்துக் கொள்ளும் சிவரஞ்சனி, எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதோடு, எந்த இடத்திலும் நடிப்பதையே காட்டிக்கொள்ளாமல், ஏதோ நிஜமான கதாபாத்திரமாகவே நம் கண்ணுக்கு தெரிகிறார். விருது நிச்சயம் மேடம்.

இளமைகால கிஷோராக ‘பசங்க’ கிஷோரும், சிவரஞ்சனியாக லவ்லினும் நடித்திருக்கிறார்கள். உருத்தாத தம்பதியரின் காதலை நம் கண் முன் நிறுத்தும் இந்த இளமை ஜோடியும் ரசிக்க வைக்கிறது.

இதற்கு முன்பு லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய படங்கள் எப்படியோ, இந்த படத்தின் மூலம், தான் தமிழ் சினிமாவின் கவனிக்கப்பட வேண்டிய இயக்குநர் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். நடிகர்கள் தேர்வு, அவர்களிடம் நடிப்பு வாங்கிய விதம், தொழில்நுட்பத்தை பயன்படுத்திய விதம், காட்சிகள் வடிவமைப்பு, என்று அனைத்தையும் நேர்த்தியாக கையாண்டிருப்பவர், குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டே படம் பார்ப்பவர்களை எளிதில் கதைக்குள் இழுத்துவிடுகிறார்.

ஜிப்ரானின் பின்னணி இசையும், கிருஷ்ணா சேகரின் ஒளிப்பதிவும், உடலும், உயிருமாக கதையுடன் சேர்ந்து பயணித்திருக்கிறது. படத்தில் இரண்டு காலக்கட்டங்களை காட்டினாலும், அனைத்துக் காட்சிகளிலும் மழையும் ஒரு கதாபாத்திரமாக வலம் வருவது ரசிக்க வைக்கிறது. பிரேமின் கச்சிதமான படத்தொகுப்பும், தபஸ் நாயக்கின் ஒலி வடிமைப்பும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

இறுதிக் காட்சியின் போது பெய்யும் பெரும் மழையில் நாமும் சிக்கிக்கொள்வது போன்ற ஒரு உணர்வை படம் ஏற்படுத்துகிறது. அந்த அளவுக்கு தொழில்நுட்பத்தை இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் கச்சிதமாக கையாண்டிருக்கிறார்.

டாக்குமெண்டரி எபெக்ட்டில் சில காட்சிகளை கோர்த்திருப்பது, பாலக்காடு ஐயர் பாஷை பேசுவது ஆகியவை சற்று நெருடல்களாக இருந்தாலும், அவற்றை ரசிகர்கள் எளிதில் மறந்துபோகும் விதத்தில் கதாபாத்திரங்களின் நடிப்பும், தொழில்நுட்பமும் பலமாக இருக்கிறது.

மொத்தத்தில், பிரம்மாண்டம் இல்லை என்றாலும், ரசிகர்களை பிரமிக்க வைக்கிறது இந்த ‘ஹவுஸ் ஓனர்.

-ஜெ.சுகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *