Tamilசெய்திகள்

ஹெல்மட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற கிரண் பேடி!

புதுவை கவர்னர் கிரண்பேடிக்கும், அமைச்சரவைக்கும் மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த நிலையில் காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் கடைசி நாள் பிரசாரத்தின் போது முதல்-அமைச்சர் நாராயணசாமி ஸ்கூட்டரில் சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் ஹெல்மெட் அணிந்து செல்லவில்லை. இதற்கு கவர்னர் கிரண்பேடி தனது டுவிட்டரில் ஒரு கருத்தை வெளியிட்டார். அதில் மோட்டார் வாகன சட்டத்தை மீறும் இச்செயல் வெட்கக்கேடானது, கோர்ட்டு உத்தரவை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவாவிடம் உத்தரவிட்டுள்ளதாக கூறிப்பிட்டிருந்தார்.

கவர்னர் கிரண்பேடியின் இந்த கருத்துக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி தனது டுவிட்டரில் பதிலடி கொடுத்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு கவர்னர் கிரண்பேடி ஹெல்மெட் அணியாமல் சென்ற படத்தை வெளியிட்டு அதில் ஒரு கருத்தை கூறுவதற்கு முன்பு தாங்கள் என்ன செய்கிறோம் என்று பாருங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே புதுவை மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவாவிடம் புகார் மனு கொடுத்தார். அதில் கவர்னர் கிரண்பேடி ஏற்கனவே புதுவை புதிய பஸ்நிலையம் உள்ளிட்ட நகர பகுதிகளில் தனது அலுவலக ஊழியர் ஒருவடன் ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்து கொண்டு ஆய்வு மேற்கொண்ட போது ஹெல்மெட் அணியாமல் சென்றதை குறிப்பிட்டார்.

எனவே விதிமுறையை மீறிய கவர்னர் கிரண்பேடி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அந்த மனுவுடன் கவர்னர் கிரண்பேடி தனது அலுவலக ஊழியருடன் ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டரில் சென்ற புகை படத்தையும் இணைத்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *