Tamilசெய்திகள்

அந்திராவில் நடைபெற்ற தடியடி திருவிழா – இருவர் பலி, 100 க்கும் மேற்பட்டவர்கள் காயம்

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் ஆலூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் தேவார கட்டா என்ற மலை கிராமம் உள்ளது. ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநில எல்லையில் ஆன்மீக ஸ்தலமாக அமைந்து உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற மல்லேஸ்வர சாமி கோவில் உள்ளது. மல்லேஸ்வர சாமிக்கு ஆண்டுதோறும் விஜயதசமி அன்று தடியடி திருவிழா நடைபெறுவது வழக்கம். திருவிழாவில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அப்போது மல்லேஸ்வரசாமி உற்சவர் சிலையை தங்களது ஊருக்கு கொண்டு செல்வதற்காக 2 தரப்பினராக பிரிந்து கட்டைகளால் தாக்கிக் கொள்வது வழக்கம்.

இதனால் ஆண்டு தோறும் நடைபெறும் தாக்குதலில் பலர் உயிர் இழப்பதும், ஆயிரக்கணக்கானோர் காயம் அடைவதும் நடந்து வருகிறது. இதனை தடுப்பதற்காக கடந்த ஒரு மாதமாக பல்வேறு கிராமங்களுக்கு சென்று கட்டைகளால் தாக்கிக் கொள்ளாமல் உற்சவம் நடத்த வேண்டும் என கலெக்டர் மற்றும் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த நிலையில் நேற்று இரவு 12.15 மணிக்கு மல்லேஸ்வர சாமிக்கு சாமி உற்சவம் தொடங்கியது. உற்சவ திருவிழாவில் நிரணி தரணி தண்டா, கொத்தபேட்டை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது சாமிக்கு மஞ்சள் பொடி தூவியும், மல்லேஸ்வரி சாமி பக்தி பாடல்களை பாடியபடி சாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதையடுத்து மல்லேஸ்வர சாமி உற்சவரை மலையிலிருந்து மலையடிவாரத்திற்கு கொண்டு வந்தனர். அப்போது மலை அடிவாரத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் குவிந்து இருந்தனர். அந்தப் பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது. பக்தர்கள் தீப்பந்தங்களை ஏந்திய படி நின்று கொண்டு இருந்தனர். மல்லேஸ்வரர் சாமி உற்சவ மூர்த்தியை தங்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்காக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது தங்களிடமிருந்த தடிகள் மற்றும் இரும்பு கம்பியால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் பலரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அந்த பகுதி முழுவதும் ரத்தக்களரியாக காட்சி அளித்தது.

சண்டைக்கு பயந்து பலர் அங்கிருந்த மரத்தின் மீது ஏறினர். ஏராளமானோர் மரத்தின் மீது ஏறியதால் பாரம் தாங்காமல் ஒரு மதத்தின் மரக்கிளை உடைந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி ஆலூரை சேர்ந்த கல்லூரி மாணவர் கணேஷ் மற்றும் ஆலூர் மண்டலம், மொளகவள்ளியை சேர்ந்த ராமாஞ்சேனேயு ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. சண்டையை தடுக்க அவர்களால் முடியவில்லை. பலியான பக்தர்கள் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

காயமடைந்தவர்களை போலீசார் மீட்டு ஆலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் பார்ப்பவர்களுக்கு காட்டுமிராண்டி செயலாக தோன்றினாலும், மல்லேஸ்வர சாமி பக்தர்கள் இதனை புனிதமான திருவிழாவாக கருதுகின்றனர். பரம்பரை பரம்பரையாக இருந்து வரும் பாரம்பரியத்தை தொடர வேண்டும் என பக்தர்கள் எண்ணுகின்றனர். இதையடுத்து சண்டையில் வெற்றி பெற்ற ஒரு தரப்பினர் மல்லேஸ்வர சாமியின் சிலையை தங்களது சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர். சாமி சிலையை தங்களது சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர். சாமி சிலையை கொண்டு சென்றவர்கள் அடுத்த ஆண்டு விஜயதசமி அன்று மீண்டும் தேவாரகட்டா கொண்டு ஒப்படைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா காட்சிகளை மிஞ்சும் இந்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.