Tamilசெய்திகள்

அமெரிக்காவில் இரக்கப்பட்டு உணவளித்த இந்தியர் சுத்தியலால் அடித்துக் கொலை!

அமெரிக்காவின் பல மாநிலங்களிலும், ஆண்டு வருமானம் $45,000த்திலிருந்து $75,000 வரை மட்டுமே உள்ளவர்கள் அதிகரித்து வரும் வாடகை பிரச்சனையை சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர். அந்த வருமானம் கூட இல்லாத பலர், வசிப்பிடம் இல்லாமல் சாலையோரங்களிலும், சுரங்கப்பாதைகளிலும் வசிக்கின்றனர்.

கடும் குளிரில், உணவு, உடை, குடிநீர் உள்ளிட்ட எந்தவித அத்தியாவசிய தேவைகளும் இன்றி அவ்வாறு கூட்டம் கூட்டமாக வசித்து வருவது வருடாவருடம் அங்கு கூடி வருகிறது. அமெரிக்காவில் சென்று பணியாற்றும் பல இந்தியர்கள் இவர்களுக்கு உணவு மற்றும் போர்வை உள்ளிட்டவைகளை வழங்கி உதவுகின்றனர்.

அமெரிக்காவின் தென்கிழக்கில் உள்ள ஜியார்ஜியா மாநில டிகால்ப் கவுன்டி பகுதியின் தென்கிழக்கில் உள்ள நகரம் லிதோனியா (Lithonia). அப்பகுதியில் உள்ள செவ்ரான் ஃபுட் மார்ட் எனும் உணவகத்தில் பகுதி-நேர வேலை பார்த்து வந்தவர், இந்தியரான விவேக் சைனி (25). அந்த உணவகத்தில் சில தினங்களுக்கு முன் ஜூலியன் ஃபால்க்னர் (Julian Faulkner) எனும் வீடற்ற ஒருவர் உணவும் குடிநீரும் கேட்டு வந்தார். அவர் மேல் இரக்கப்பட்டு விவேக்கும் உணவக பணியாளர்களும் அவருக்கு உணவு, சிப்ஸ், மற்றும் கோக் வழங்கினர். குளிருக்கு போர்வை கேட்ட ஜூலியனுக்கு அவர்கள் தங்களிடம் இருந்த உடைகளை வழங்கினர்.

அடிக்கடி அங்கு வருவதும் போவதுமாக இருந்த ஜூலியனுக்கு விவேக் தன்னால் இயன்ற உதவிகளை தினமும் செய்து வந்தார். உணவக வாசலை வசிப்பிடம் போல் ஜூலியன் பயன்படுத்தி உறங்க தொடங்கியதும் அவரை விவேக் வேறு எங்காவது சென்று விடுமாறு கூறினார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கடை வாசலில் இருந்து வெளியேறா விட்டால் காவல்துறையினரை அழைக்க வேண்டி வரும் என விவேக் ஜூலியனிடம் எச்சரித்தார்.

சிறிது நேரத்தில் விவேக் வீட்டிற்கு புறப்பட தயாராகி வெளியே வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை மறித்த ஜூலியன், கையில் மறைத்து வைத்திருந்த ஒரு சுத்தியலால் விவேக்கின் முகத்தில் சரமாரியாக தாக்கினார். விவேக் முகத்தில் ஜூலியன் சுமார் 50 முறை சுத்தியலால் தாக்கினார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த விவேக், சிறிது நேரத்தில் அங்கேயே உயிரிழந்தார்.

சம்பவத்தை கண்ட பிற பணியாளர்கள் அதிர்ச்சியடைந்து தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் அங்கு நின்று கொண்டிருந்த ஜூலியனை கைது செய்து அவரிடம் சுத்தியலை தவிர இருந்த மேலும் 2 கத்திகளையும் பறிமுதல் செய்தனர். ஜூலியனை சிறையில் அடைத்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பி.டெக் பட்டப்படிப்பை முடித்து 2 வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் குடிபுகுந்த விவேக், சில மாதங்களுக்கு முன் வணிக நிர்வாகத்தில் பட்டமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.