Tamilசெய்திகள்

அரசு திட்டங்கள் கடைக்கோடி மக்கள் வரை சென்றடைய வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழகத்தில் மத்திய அரசின் பங்களிப்புடன் 15 துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் 41 திட்டங்களை கண்காணிக்க மாநில அளவில் வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணைத் தலைவராக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் உள்ளனர். இக்குழுவின் முதல் கூட்டம் கடந்த மே மாதம் நடைபெற்ற நிலையில், 2-வது கூட்டம் இன்று காலை 10.30மணியளவில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், மத்திய அரசின் பங்களிப்புடன் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்களான பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டம், தேசிய நலவாழ்வு குழுமம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் அமலாக்கம் மற்றும் பிரதம மந்திரி முன்னோடி கிராமத் திட்டம் ஆகிய திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் பணிகளை விரைவுபடுத்தி குறித்த காலத்திற்குள் முடித்திட வேண்டும் எனவும், திட்ட செயல்பாட்டில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம் பெறும் வகையில் செயல்பட வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த கூடுதல் நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்துத்துறை வளர்ச்சி என்ற உன்னதமான நோக்கத்தோடு இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் மிக முக்கியமானது கிராமப்புற வளர்ச்சி. கிராமப்புறப் பிரச்சினைகளை மைக்ரோ அளவில் கவனிக்க வேண்டும் என்றும், அதற்கு மேக்ரோ அளவிலான நன்மைகளைச் செய்து தர வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறேன். அந்த வகையில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கட்டமைப்பு வசதிகளில் சிறப்புக் கவனம் செலுத்தும் நோக்கோடு இந்த ஆய்வுக்கூட்டம் நடத்தப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் ஐந்து முக்கிய குறிக்கோள்கள் குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதியினுடைய மேம்பாட்டுத் திட்டம்: 2019-2020-ம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் 3,471 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, இதுவரை 3,043 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள 428 பணிகள் முன்னேற்றத்தில் உள்ளதாக துறை அறிக்கை தெரிவிக்கின்றது. அதேபோல், 2021-22-ம் ஆண்டினை பொறுத்தவரைக்கும், 1,015 பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, அவற்றில் 570 பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. இந்த நிதியை முறையாகப் பயன்படுத்தி விரைந்து பணிகளை முடிக்க வேண்டும்.

பொதுமக்கள் அனைவருக்கும் சமமான, தரமான மருத்துவ சேவைகளை எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் வழங்க வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தினுடைய நோக்கம். தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம், நம்மைக் காக்கும் 48, மனம்- மனநலத்தை மேம்படுத்துதல், காசநோய் இறப்பில்லாத் திட்டம், நடமாடும் மருத்துவக் குழு, நடமாடும் மருத்துவமனை, இளம் சிறார் நல்வாழ்வைத் தேடி (ஊட்டச்சத்து கணக்கெடுப்பு), பச்சிளங் குழந்தைகளுக்கான அவசர கால மேலாண்மைப் பிரிவு, குழந்தைகள் தீவிர சிகிச்சை மற்றும் அவசர கால மேலாண்மை பிரிவுத் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

மாநிலத்தில் உள்ள 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்களில் 27 லட்சத்து, 774 குழந்தைகள், 7 லட்சத்து 51 ஆயிரத்து 673 கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கு இச்சேவை சிறப்பாக அளிக்கப்படுகிறது. மாநிலத்தின் அனைத்து குடும்பத்தினருக்கும் உணவு பாதுகாப்பினை உறுதி செய்திடும் பொருட்டு அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி மற்றும் கோதுமை விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், ‘பட்டினியின்மை’ எனும் இலக்கு எய்தப்பட்டுள்ளது.

நியாயவிலைக் கடைகளின் தரத்தையும் உயர்த்தி வருகிறோம். கிராம மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்குமேல் ஆதிதிராவிடர் வாழும் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதி செய்ய இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஒரு கிராமத்திற்கு ரூபாய் 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 23 மாவட்டங்களைச் சேர்ந்த 1,357 வருவாய் கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்த ஐந்து திட்டங்களின் செயல்பாடுகள் தொடர்பாக அனைவரும் விரிவாக ஆலோசனை செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு திட்டமுமே ஒவ்வொரு விதத்தில் முக்கியமானதுதான். இவை அனைத்தும் ஒட்டுமொத்தமான வளர்ச்சிக்கு ஒவ்வொரு விதத்தில் உதவி செய்பவை. எனவே கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டும். எந்தத் திட்டமாக இருந்தாலும் அதனுடைய செயல்பாடுகள் கடைகோடி மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதே நமது நோக்கம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் பெரிய கருப்பன், எம்.பி.க்கள், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், ஆ.ராசா, திருமாவளவன், செல்வ ராஜ், நடராஜன், திருநாவுக்கரசர், நவாஸ்கனி, எம்.எல்.ஏ.க்கள் செங்கோட்டையன், வி.ஜி.ராஜேந்திரன், எழிலன், நீலமேகம், பூமி நாதன், அசன் மவுலானா, தலைமை செயலாளர் இறையன்பு, ஊராட்சி முதன்மை செயலாளர் அமுதா, டாக்டர் ராதா கிருஷ்ணன் உள்பட துறை செயலாளர்கள் பங்கேற்றனர்.