Tamilசெய்திகள்

ஆளுநர் ரவி பச்சைப் பொய்களை கொட்டி கடை விரித்திருக்கிறார் – டி.ஆர்.பாலு எம்.பி அறிக்கை

தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வெள்ளையரை எதிர்த்து வீரப்போர் புரிந்து, உயிரைத் துச்சமென நினைத்து, மரணத்தை முத்தமிட்ட மாவீரர்கள் மருது சகோதரர்களின் தியாகத்தை தமிழ்நாடு அரசு போற்றிவரும் நிலையில், மருதிருவர் விழா ஒன்றில் பங்கேற்ற ஆளுநர் ரவி பச்சைப் பொய்களை கொட்டி கடை விரித்திருக்கிறார். தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டத் தியாகிகளின் வரலாற்றைத் தேடிப் பார்த்தாராம். அவருக்கு எதுவுமே கிடைக்கவில்லையாம். தமிழ்நாடு அரசு தியாகிகளை மறந்து விட்டதாம். பா.ஜ.க. தலைவர்கள் எப்படி அன்றாடம் பொய் பேசி, வதந்தி பரப்புகிறார்களோ, அவர்களுக்குப் போட்டியாக, தமிழ்நாட்டின் பா.ஜ.க. தலைவராக வேண்டும் என்ற ஆசையில் ஆளுநரும் பொய்யாகவே பேசுகிறார்.

பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வேலுநாச்சியார், வீரன் அழகுமுத்துக்கோன், தீரன் சின்னமலை, மகாகவி பாரதியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., திருப்பூர் குமரன் போன்ற எண்ணற்ற தியாகிகளை என்றென்றும் மதித்துப் போற்றுகின்ற அரசாகத் தமிழ்நாடு அரசு திகழ்ந்து வருகிறது. மருது பாண்டியர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வரலாற்றை சித்தரிக்கும் ஊர்திகளை டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் சேர்க்க முடியாது என மறுத்து ஒன்றிய பா.ஜ.க. அரசு திருப்பி அனுப்பியபோது இந்த ஆளுநர் ரவி எங்கே போனார்? அந்த ஊர்திகளை எல்லாம் தமிழ்நாடு முழுவதும் பயணிக்க வைத்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் ஓரணியில் நின்று அந்த ஊர்திகளை வரவேற்ற காட்சி ஆளுநர் மாளிகையில் அமர்ந்திருந்த ரவி மறந்து விட்டரா? அலுவலகத்தில் தேசியக் கொடியையே ஏற்றாமல் இருந்த ஆர்.எஸ்.எஸ். பிரசாரகராக பவனி வரும் ரவி தனது திருவாயை ஏன் அப்போது திறக்கவில்லை?

முத்தமிழறிஞர் கலைஞர் முதல்வராக இருந்தபோது, இந்திய விடுதலையின் வெள்ளிவிழா ஆண்டில் விடுதலைக்காகப் பாடுபட்ட தமிழ்நாட்டுத் தலைவர்களில் அன்றைக்கு உயிருடன் இருந்த மூத்த தலைவர்களின் வீடு தேடிச் சென்று அவர்களுக்கு தாமிரப் பட்டயத்தை வழங்கினார் கலைஞர். தமிழ்நாடு முழுவதும் விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கு மதிப்பூதியம் (பென்ஷன்) வழங்கப்பட்டது. தற்போது அந்த மதிப்பூதியம் மாதம் 20 ஆயிரமாக உயர்த்தி வழங்குகிறது திராவிட மாடல் அரசு. அது மட்டுமல்ல, விடுதலைப் போராட்டத் தியாகிகளின் குடும்பத்தாருக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், மாதம் 10 ஆயிரம் ரூபாய் என்பதிலிருந்து 11 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று கடந்த ஆகஸ்ட் 15 அன்று விடுதலை நாளில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றியபோது முதலமைச்சர் அறிவித்து செயல்படுத்தி இருக்கிறார்.

விடுதலை நாள் உரையில் இந்திய விடுதலையில் தமிழ்நாட்டின் பங்கு முதன்மையானது, முக்கியமானது என்பதை மிகத் தெளிவாகப் குறிப்பிட்டிருக்கிறார் முதலமைச்சர். விடுதலை வீரர்களைப் போற்றிப் பாராட்டுவதில் திராவிட முன்னேற்றக் கழக அரசு யாருக்கும் சளைத்தது அல்ல. மாவீரன் பூலித்தேவனுக்கு, நினைவு மண்டபம்! பாஞ்சாலங்குறிச்சியில், வீரபாண்டிய கட்டபொம்மனுக்குக் கோட்டை! மாவீரன் சுந்தரலிங்கம் வாரிசுகளுக்கு வீடு! பாரதியின் வீடு, அரசு இல்லம் ஆனது! பெருந்தலைவர் காமராசருக்கு, மணிமண்டபம்! மூதறிஞர் ராஜாஜிக்கு, நினைவாலயம்! தில்லையாடி வள்ளியம்மாளுக்கு, மணிமண்டபம்! வீரவாஞ்சியின் உறவினருக்கு, நிதி! வ.உ.சி. இழுத்த செக்கு, நினைவுச் சின்னம் ஆனது. விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு, இலவசப் பேருந்து பயணம்! தியாகிகளுக்கு, மணி மண்டபம்! விடுதலைப் பொன்விழா நினைவுச் சின்னம்! தியாகி விஸ்வநாத தாஸ் வாழ்ந்த இல்லம் புதுப்பிப்பு! நேதாஜிக்கு சுபாஷ் சந்திர போசுக்குச் சிலை! தியாகி கக்கனுக்குச் சிலை! சிப்பாய் கலகத்துக்கு நினைவுத்தூண்!

இப்படி நாட்டுக்காக உழைத்த தியாகிகளைப் போற்றிய இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். மொழிப்பற்று-இனப்பற்றுடன் நாட்டுப்பற்றையும் ரத்த உணர்வாகக் கொண்டவர்கள் நாம். இந்திய விடுதலையின் 75-வது ஆண்டு விழாவைப் பெருவிழாவாகக் கொண்டாடினோம். மகாகவி பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11-ம் நாளை ‘மகாகவி நாள்’ என அறிவித்தோம். மகாகவி பாரதியார் மறைந்த நூற்றாண்டின் நினைவை முன்னிட்டு 14 அறிவிப்பினைச் செய்தோம். செக்கிழுத்த செம்மல்-கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரைப் பெருமைப்படுத்தும் வகையில் 13 அறிவிப்புகளை வெளியிட்டோம். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் படைப்புகளைத் தொகுத்துப் பாடநூல் கழகத்தின் சார்பில் வெளியிட்டுள்ளோம்.

உத்தரபிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீடு சீரமைக்கப்பட்டது. கிண்டி காந்தி மண்டபத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டது. கிண்டியில் மருது சகோதரர்கள் சிலை அமைக்கப்பட்டுள்ளது. விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவிடங்களில் ஒலி, ஒளிக் காட்சிகள் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனது வாழ்நாளில் 20 முறை தமிழ்நாட்டுக்கு வந்தவர் அண்ணல் காந்தியடிகள். அரையாடை அணிவது என்ற முடிவை மதுரை மண்ணில் இருந்துதான் காந்தியடிகள் எடுத்தார்கள். இதன் அடையாளமாகச் சென்னை அருங்காட்சியக வளாகத்தில் காந்தியடிகளின் நினைவுச் சிலையை அமைத்துள்ளோம்.

விடுதலைப் போராட்ட வீரர்களை நாம் ஏன் இந்தளவுக்குப் போற்றுகிறோம் என்றால், தமிழ்நாடுதான் விடுதலைப் போராட்டத்துக்கான விதையை முதலில் விதைத்தது. விடுதலை தாகத்தில்-விடுதலை வேகத்தில், நாட்டுப்பற்றில் நம் தமிழ் இனம் இந்தியாவில் உள்ள எந்த இனத்திற்கும் எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல. இப்படி பட்டியல்கள் திராவிட மாடல் அரசில் ஏராளமாக இருக்கின்றன என்பதை கவர்னர் ரவி புரிந்து கொள்ள வேண்டும் .

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.