Tamilவிளையாட்டு

இன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்

ஒலிம்பிக் டைவிங் போட்டி – பெண்கள் சின்குரோனைஸ்டு 10மீ பிளாட்ஃபார்ம் பிரிவில் சீனா தங்கம் வென்றது

ஒலிம்பிக் போட்டி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இதில், கலந்து கொண்ட பல்வேறு நாடுகளும் அற்புதமாக விளையாடி அசத்தி வருகின்றன.

இந்நிலையில், இன்று நடைபெற்ற பெண்களுக்கான  டைவிங் போட்டியில் சின்குரோனைஸ்டு 10மீ பிளாட்ஃபார்ம் பிரிவு இறுதி சுற்றில் 8 அணிகள் கலந்து கொண்டது. இரண்டு பேர் இணைந்து பங்கெடுத்த இந்த போட்டியில் மொத்தம்  6 சுற்றுகள் நடைபெற்றன. இதில் சீன ஜோடி 363.78 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்து  தங்கப்பதக்கத்தை வென்றது.

310.80 புள்ளிகள் கணக்கில் அமெரிக்கா இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளி வென்றது. 299.70 புள்ளிகள் கணக்கில் மெக்சிகோ மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலம் வென்றது.

ஒலிம்பிக் குத்துச்சண்டை – இந்திய வீராங்கனை காலியிறுதிக்குள் நுழைந்தார்

குத்துச்சண்டை போட்டியில் பெண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவு ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் இந்தியாவின் லோவ்லினா போர்கோஹைன் ஜெர்மனியின் நடின் அபேட்ஸ்-ஐ எதிர்கொண்டார். இதில் 28-29, 29-28, 30-27, 30-27, 27-30 என புள்ளிகள் பெற்று 3-2 என வெற்றி பெற்றார். இதன் மூலம் காலிறுதிக்கு முன்னேறினார்.

காலிறுதியில் சீன தைஃபேயின் என்சி சென்-ஐ எதிர்கொள்கிறார். இந்த போட்டி 30-ந்தேதி நடைபெறுகிறது.

ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் – இந்திய வீரர் கமல் சரத் 3வது சுற்றில் தோல்வி

டேபிள் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த சரத் கமல் இன்று 3-வது சுற்றில் உலகத்தர வரிசையில் 2-வது இடத்தில் உள்ள சீனாவின் லாங் மா-வை எதிர்கொண்டார்.

பலம் வாய்ந்த சீன வீரருக்கு சவால் கொடுக்கும் வகையில் சரத் கமல் விளையாடினார். என்றாலும் முதல் கேம்-ஐ சரத் கமல் 7-11 என இழந்தார். ஆனால் 2-வது செட்டில் சிறப்பாக விளையாடி, அதை 11-8 எனக் கைப்பற்றினார். 3-வது கேம்-ல் கடும் நெருக்கடி கொடுத்தார். என்றாலும் 11-13 என அந்த கேம்-ஐ இழக்க நேரிட்டது.

4-வது கேம்-ஐ 4-11 எனவும், 5-வது கேம்-ஐ 4-11 எனவும் இழந்து, இறுதியில் 1-4 எனத் தோல்வியடைந்து ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு போட்டியில் இருந்து வெளியேறினார்.

ஒலிம்பிக் பேட்மிண்டன் – இந்திய ஆண்கள் அணி காலியிறுதி வாய்ப்பை இழந்தது

பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஆண்கள் ஜோடியான சிராக் ஷெட்டி- சாத்விக்சாய்ராஜ் ஜோடி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்திருந்தது. இதே பிரிவில் இந்தோனோசியா, சீன தைஃபே, கிரேட் பிரிட்டன் ஜோடிகளும் இடம் பிடித்திருந்தன. ஒவ்வொரு ஜோடியும் மற்ற ஜோடியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் ஜோடி காலிறுதிக்கு முன்னேறும்.

இந்திய ஜோடி முதல் ஆட்டத்தில் சீன தைஃபே ஜோடியை எளிதாக வென்றது. ஆனால் இந்தோனேசியாவுக்கு எதிராக படுதோல்வியடைந்தது. இன்று கிரேட் பிரிட்டனுக்கு எதிராக 2-0 என வெற்றி பெற்றது.

இந்தோனேசியா, சீன தைஃபே, இந்திய ஜோடிகள் தலா இரண்டு வெற்றிகள் பெற்றிருந்தனர். ஆனால் இந்தோனேசியா ஜோடி 140 பாயிண்ட்கள் வெற்றி பெற்றிருந்தது. 108 பாயிண்ட்களை (140-108= 32) இழந்திருந்தது.

சீன தைஃபே 161 பாயிண்ட்கள் பெற்றிருந்தது. 151 பாயிண்ட்கள் (161-151= 10) இழந்திருந்தது. இந்திய ஜோடி 131 பாயிண்ட்கள் வெற்றி பெற்றிருந்தது. 140 பாயிண்ட்களை இழந்திருந்தது (131-140= -9). இதனால் பாயிண்ட்கள் அடிப்படையில் இந்தோனேசியா, சீன தைஃபோ ஜோடிகள் காலிறுதிக்கு முன்னேறின. இந்திய ஜோடி காலிறுதி வாய்ப்பை இழந்தது.

ஒலிம்பிக் ஹாக்கி – இந்திய ஆண்கள் அணி ஸ்பெயினை வீழ்த்தி வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஹாக்கியில் இந்திய ஆண்கள் அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இன்று நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் ஸ்பெயினை எதிர்கொண்டது.

ஆட்டம் தொடங்கியதில் இருந்து இந்திய வீரர்கள் ஆக்ரோசமாக விளையாடினார்கள். ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் சிம்ரன்ஜித் சிங் முதல் கோலை பதிவு செய்தார். அடுத்த நிமிடத்தில் ருபிந்தர்பால் சிங் கோல் அடித்தார். இதனால் முதல் கால்பகுதி ஆட்டத்தில் இந்தியா 2-0 என முதலிடம் முன்னிலை பெற்றது.

2-வது மற்றும் 3-வது காலிறுதி பகுதி ஆட்டங்களில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. 4-வது காலிறுதி ஆட்டத்தில் ருபிந்தர் பால் சிங் (51) மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் இந்தியா 3-0 என ஸ்பெயினை வீழ்த்தியது.

இந்திய ஹாக்கி அணி இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றி பெற்றுள்ளது.