Tamilசெய்திகள்

இலங்கையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.2 லட்சம்

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் மக்கள் பொருளாதார நெருக்கடியின் பலமுனைத் தாக்குதலில் திண்டாடிப் போயுள்ளனர்.

எரிபொருள், உணவுப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வுடன், தினசரி பல மணி நேர மின்வெட்டும் அந்நாட்டு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றன.

சுற்றுலாத் துறையை பெரிதும் சார்ந்த இலங்கையின் பொருளாதாரம், கொரோனா தொற்றால் 90 சதவீத பாதிப்புக்கு உள்ளானது. அன்னியச் செலாவணி பற்றாக்குறையால் எரிபொருள் இறக்குமதி உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டது.

அந்நியச் செலாவணி கையிருப்பு மோசமாக சரிந்ததால் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உணவு மற்றும் எரிபொருட்களின் விலை பலமடங்கு அதிகரித்துள்ள நிலையில், அவற்றுக்கு தட்டுப்பாடும்ஏற்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள்கூட கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இலங்கை அரசுக்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இலங்கையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.2 லட்சமாக அதிகரித்துள்ளது. அங்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது என தங்க நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக உச்சத்தைத் தொட்டுள்ள தங்கத்தின் விலை அதிகபட்சமாக ஒரு சவரன் ரூ.1.35 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று சவரன் ரூ.2 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.