Tamilசெய்திகள்

உக்ரைனில் தாக்கப்படும் இந்தியர்கள் – பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால் அந்த நாடு தனது வான் எல்லையை மூடி உள்ளது. இதனால் அங்குள்ள மாணவர்கள் உள்பட இந்தியர்கள் பக்கத்து நாடுகளுக்கு சென்று அங்கிருந்து இந்தியா திரும்பி கொண்டு இருக்கிறார்கள்.

‘ஆபரே‌ஷன் கங்கா’ செயல் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல இந்திய விமானப்படை விமானம் மூலமும் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

இதுவரை 6,200 இந்தியர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் ஆவார்கள்.அடுத்த 2 நாட்களில் 7,400 பேரை மீட்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உக்ரைனில் சிக்கி தவித்த மேலும் 185 இந்தியர்கள் இன்று மும்பை வந்தனர். ருமேனிய தலைநகர் புகாரெஸ்டில் இருந்து இன்று அதிகாலை 2 மணிக்கு 185 பேருடன் விமானம் மும்பை வந்தது.

இந்த நிலையில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள் ஜெய்சங்கர், பியூஸ்கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர். இதே போல தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் பங்கேற்றனர்.

உக்ரைனில் இன்னும் தவித்து வரும் இந்தியர்களை தொடர்ந்து மீட்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

உக்ரைனில் இருந்து மாணவர்களை விரைவில் மீட்பது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.

ரஷியா நடத்திய தாக்குதலில் கர்நாடகாவை சேர்ந்த நவீன் என்ற மாணவர் ஏற்கனவே பலியாகி இருந்தார். இன்று மற்றொரு மாணவர் துப்பாக்கி சூட்டில் காயமடைந்தார். அவருக்கு உக்ரைன் தலைநகர் கிவ்வில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக மாணவர்களை பத்திரமாக அழைத்து வருவது தொடர்பாக இந்த அவசர ஆலோசனை நடத்தப்பட்டது.