Tamilசெய்திகள்

உண்மையான சமூகநீதி நாயகனாக இருப்பவர் பிரதமர் மோடி – அண்ணாமலை பதிவு

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

நமது நாட்டின் முதல் பழங்குடி சமூகத்தை சேர்ந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது ஏழ்மையை கல்வி மற்றும் அரசியல் அங்கீகாரம் என்ற நெருப்பால் பொசுக்கி தனது வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டவர். திரவுபதி முர்முவை ஜனாதிபதியாக்கி உண்மையான சமூகநீதி நாயகனாக இருப்பவர் பிரதமர் மோடி.

அடித்தட்டு மக்களுக்கும் அரசியல் அங்கீகாரம் வழங்குவதால் மட்டுமே மக்களாட்சி முழுமை அடைகிறது. நாங்கள் ஆரியத்துக்குத் தான் எதிரி. ஆன்மீகத்துக்கு இல்லை என்று கூறும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதி தேர்தலில் பழங்குடியின பெண்ணான முர்முவுக்கு வாக்களிக்காமல் இவர் எதிர்க்கும் ஆர்யரான யஷ்வந்த் சின்ஹாவுக்கு வாக்களித்தார். இதுதான் தி.மு.க.வின் சமூக நீதி.

பிரதமர் மோடியின் 78 மத்திய மந்திரிகளில் 11 பேர் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்கள். மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் 34 பேரில் ஒருவர் கூட இல்லை. அரசியல் ஆதாயத்துக்காக ஆரியம், திராவிடம் என்று நாடகம் ஆடுகிறார்கள். அனைத்து சட்ட மசோதாக்களும் ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பிறகே சட்டமாகும். அத்தகைய உயர்ந்த பதவி வகிக்கும் ஜனாதிபதியை மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்ய ஏன் அழைக்கவில்லை என்கிறார்கள் தி.மு.க.வினர்.

2010-ம் ஆண்டு மகளிர் மசோதாவை காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்த போது, அப்போதைய பெண் ஜனாதிபதியான பிரதிபா பாட்டீலை காங்கிரஸ் மற்றும் தி.மு.க. அழைக்கவில்லை. அன்று காங்கிரஸ் கூட்டணியில் இருந்த கட்சிகளே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஆதரிக்க வில்லை. ஆனால், எதிர்க் கட்சியாக இருந்த பா.ஜ.க. ஆதரித்தது. இன்று இந்த வரலாற்று சிறப்புமிக்க மசோதாவை பா.ஜ.க. தான் நிறைவேற்றியுள்ளது.

2010-ம் ஆண்டு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக வாக்களித்த ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் சமாஜ்வாதி கட்சி இன்று இந்தியா கூட்டணியில் தான் இருக்கிறது. அவர்களை அழைத்து மகளிர் உரிமை மாநாடு நடத்திக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்திற்கு, இந்திய அளவில் 2021-2026-ம் ஆண்டு வரை ஒதுக்கியுள்ள நிதி 26,135.46 கோடி ரூபாய். தமிழகத்தில் சுமார் 7 லட்சம் மலைவாழ் பழங்குடி மக்கள் உள்ளனர்.

பழங்குடியினர் நலனுக்காக, 2018 முதல் 2021-ம் ஆண்டுகளில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நிதி 1425.18 கோடி ரூபாய். பத்தாம் வகுப்பு வரையிலான தமிழகப் பழங்குடியினர் மாணவர்களுக்கு, 2014 முதல் 2022 வரை, 8 ஆண்டுகளில் வழங்கப்பட்ட நிதி 19.76 கோடி ரூபாய். பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்கும் தமிழகப் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நிதி 226 கோடி ரூபாய்.

நாடு முழுவதும் 694 ஏகலைவா பள்ளிகள் உள்ளன. அவற்றில் 1,15,169 பழங்குடியின மாணவர்கள் படிக்கின்றனர். தமிழகத்திற்கு 8 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகள் வழங்கியுள்ளது நமது மத்திய அரசு. அதில் 2867 மலைவாழ் பழங்குடி மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்த ஆண்டு மட்டும் 8.67 கோடி ரூபாய் நிதியை இந்தப் பள்ளிகளுக்கு நமது மத்திய அரசு வழங்கியுள்ளது. கிராமப்புற மாணவர்கள், அனைத்து கல்வி வசதிகள், பேருந்து கட்டணம் என்று பயன்பெற மத்திய அரசு நடத்தும் நவோதயா பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

இதில் 89 சதவீதம் 2,30,817 பேர் கிராமப்புற மாணவ, மாணவிகள். 25.38 சதவீத மாணவ-மாணவிகள் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். நவோதயா பள்ளிகள் மும்மொழி கொள்கையை கடைபிடிக்கிறது என்ற ஒரே அரசியல் காரணத்தினால் தமிழக அரசு நவோதயா பள்ளிகளைப் புறக்கணித்து வருகிறது.

கேரளாவில் 14, கர்நாடகாவில் 28, ஆந்திராவில் 15, தெலுங்கானாவில் 9 நவோதயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. மலையாளம், கன்னடம், தெலுங்கு அழிந்து விட்டதா? நவோதயா பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை அவரவர் தாய் மொழியே பயிற்று மொழியாக உள்ளது. இது எப்படி இந்தியை திணிக்கும் பள்ளி என்று கூறுகிறார்கள் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இரண்டு நவோதயா பள்ளிகள் கொண்டு வரப்படும். வருகிற பாராளுமன்ற தேர்தலில், போலி சமூக நீதி வேஷம் போடும் தி.மு.க. கூட்டணிக் கட்சிகளை முழுவதுமாகப் புறக்கணிப்போம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.