Tamilவிளையாட்டு

உலகக் கோக்கை அரையிறுதி வாய்ப்பு – 2 இடத்துக்கு மோதும் ஆறு அணிகள்

50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் விரைவில் முடிவடைய இருக்கின்றன.

இந்தியா 8 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றிபெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. தென்ஆப்பிரிககா 8-ல் ஆறு போட்டிகளில் வெற்றிபெற்று 2-வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. வங்காளதேசம், இங்கிலாந்து அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டன.

ஆஸ்திரேலியா (7-ல் 5 வெற்றி), நியூசிலாந்து (8-ல் 4 வெற்றி), பாகிஸ்தான் (8-ல் 4 வெற்றி), ஆப்கானிஸ்தான் (7-ல் 4 வெற்றி), இலங்கை (7-ல் 2 வெற்றி), நெதர்லாந்து (7-ல் 2 வெற்றி) இந்த ஆறு அணிகள் அரையிறுதி வாய்ப்பில் நீடித்து வருகின்றன.

ஆஸ்திரேலியா

தற்போது 10 புள்ளிகளுடன 3-வது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் அணிகளுக்கு எதிராக விளையாட இருக்கிறது. இதில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் கூட அரையிறுதிக்கு முன்னேறும். ஒருவேளை இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தால், மற்ற அணிகளின் முடிவிற்காக காத்திருக்க வேண்டும்.

நியூசிலாந்து

நியூசிலாந்து அணிக்கு இன்னும் ஒரு போட்டி உள்ளது. இலங்கைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும். அப்படி வெற்றி பெற்றாலும் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட முடியாது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளின் வெற்றி, தோல்வி முடிவை பொறுத்து தகுதி பெற வாய்ப்புள்ளது. நியூசிலாந்து தோல்வியடைந்தால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து அணிகள் மீதமுள்ள போட்டியில் மிகப்பெரிய வித்தியாசத்தில் தோற்க வேண்டும்.

பாகிஸ்தான்

பாகிஸ்தான் தற்போது 5-வது இடத்தில் உள்ளது. ஏறக்குறைய நியூசிலாந்து அணியின் நிலையை போன்றதுதான். இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெறுவதுடன், ரன்ரேட்டில் நியூசிலாந்தை விட அதிகம் வைத்திருக்க வேண்டும். ஒருவேளை இங்கிலாந்திடம் தோல்வியடைந்தால் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, இலங்கை அணிகள் மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் தோல்வியடைய வேண்டும்.

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் தற்போது 8 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பை பெற்றுவிடும். ஆனால் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவுக்கு வெற்றி பெறுவது அவர்களுக்கு கடினமான ஒன்று. ஆப்கானிஸ்தான் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தால் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மிகப்பெரிய வித்தியாசத்தில தோல்வியை சந்திக்க வேண்டும்.

இலங்கை

4 புள்ளிகளுடன் இருக்கும் இலங்கை வங்காளதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாட இருக்கிறது. இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று மற்ற அணிகள் மிகப்பெரிய அளவில் தோல்விகளை சந்திக்க வேண்டும். ஒரு போட்டியில் தோற்றாலும் கூட வெளியேற வேண்டியதுதான்.

நெதர்லாந்து

4 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து இலங்கையை போன்ற சூழ்நிலைதான். இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிராக விளையாட வேண்டும். இரண்டு அணிகளுக்கும் எதிராக மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறுவது சாத்தியமற்றதாகும். எப்படி இருந்தாலும் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகளுக்கு ரன்ரேட் மிகப்பெரிய பங்காற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.