Tamilசெய்திகள்

எதிர்க்கட்சி துணைத் தலைவராக நத்தம் விஸ்வநாதன் தேர்வு – சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்?

தமிழக சட்டசபையில் 66 எம்.எல்.ஏ.க்களை கொண்ட அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக உள்ளது. எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியும், துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பற்றிய பிரச்சினையில் எடப்பாடி பழனிசாமி வகித்து வந்த இணை ஒருங்கிணைப்பாளர் பதவி, ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டன. ஒற்றை தலைமையை தேர்வு செய்வதற்கான சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடந்த 11-ந்தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

அத்துடன் ஓ.பன்னீர் செல்வம் வகித்து வந்த கட்சியின் பொருளாளர் பதவியும் பறிக்கப்பட்டது. கட்சிக்கு விரோதமாக செயல்படுவதாக கூறி கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். இதற்கிடையில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற அதேநேரத்தில் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அப்போது இருதரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல், அடிதடி நடந்தது.

இதன் காரணமாக கட்சி அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. அன்றைய தினம் நடைபெற்ற பொதுக்குழு கட்சி விதிப்படி நடைபெறவில்லை. எனவே அந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்க கோரி ஓ.பன்னீர் செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்டுள்ளார்.

தங்கள் தரப்பையும் விசாரிக்காமல் முடிவெடுக்க கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் ‘கேவியட்’ மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களை தன்வசம் வைத்துள்ள எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 62 எம்.எல்.ஏ.க்களும் இருக்கிறார்கள். ஓ.பி.எஸ். அணியில் அவரையும் சேர்த்து 3 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான அடுத்தக் கட்ட அதிரடி நடவடி க்கையை எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார். அதாவது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்தின் சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியையும் பறிக்க திட்டமிட்டுள்ளார்.

தனது தீவிர ஆதரவாளரும் கட்சியின் துணை பொதுச்செயலாளருமான நத்தம் விசுவநாதனை எதிர்க்கட்சி துணைத்தலைவராக நியமிக்க முடிவு செய்துள்ளார். இதுதொடர்பான பரிந்துரை கடிதத்தை சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி அனுப்ப இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.